முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 17, 2017

பாம்பன், தொண்டி, சக்கரக்கோட்டை ஆகிய இடங்களில் மதுபான கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் முற்றுகை!!

No comments :
பாம்பனில் இயங்கி வரும் மூன்று மதுபான கடைகளையும் அகற்ற வலியுறுத்தி பெண்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மீனவ மகளிர் அமைப்பின் சார்பில் பாம்பன் நகர் பேருந்து நிறுத்தத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு மோட்சராக்கினி தலைமை வகித்தார். மீனவ மகளிர் அமைப்பு தலைவி இருதயமேரி, ஜெபமாலை முன்னிலை வகித்தனர்.

மாதர்சங்க பொருளாளர் மேரிடெய்சி, உலகம்மாள், மனோகரி, எமரென்சியா, நிர்மலா, முத்துநம்பு, உலகம்மாள், மரியசாந்தி உட்பட பலர் பேசினர். பாம்பன் வாழும் ஏழை மீனவ மக்களின் நலன் கருதியும், பெண்களின் பாதுகாப்பு கருதியும் பாம்பனில் இயங்கி வரும் மூன்று மதுபானக்கடைகளையும் அகற்றவும்,


ராமேஸ்வரம் தீவுப்பகுதியை மதுஇல்லாத பகுதியாக அறிவிக்க அரசும், மாவட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

இதுபோல் தொண்டி அருகே நம்புதாளையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயில் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதை உடன் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து கலெக்டர் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் மத்தியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் குடிமகன்களின் தொல்லை குடியிருப்பு பகுதி மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்று காலை சுற்றுவட்டார கிராம மக்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கடையை அடைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். திடீரென பெண்கள் கடையை உடைக்க முற்பட்டனர். இதனால் சிறிது நேரம் பதட்டம் ஏற்ப்பட்டது.

இதையடுத்து திருவாடானை டிஎஸ்பி விஜயகுமார், தாசில்தார் தாமஸ், டாஸ்மாக் மண்டல மேலாளர் வடமலை ஆகியோர் கிராமத்திற்கு ஒருவர் என அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு வாரத்தில் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


டாஸ்மாக் மேலாளர் வடமலை கூறும்போது, பொதுமக்களுக்கு இடையூராக உள்ள இந்த கடையை ஒரு வாரத்தில் அகற்றிவிட முடிவு செய்துள்ளோம். மாற்று இடம் தேர்வு செய்து விட்டு உடன் கடையை அடைத்துவிடுவோம் என்றார்.

இது போல சக்கரக்கோட்டையிலும் மதுபானகடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

சுய தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை அரசு மானியத்துடன் கடனுதவி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும்சுயதொழில் செய்பவர்களது பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வித்தகுதி தேவையில்லை. வயது வரம்பு ஏதுமில்லை. வருமான உச்சவரம்பு இல்லை. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க அரசு மானியத்துடன் வங்களின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச திட்டத்தொகையாக ரூ.25 லட்சமும்சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு திட்டத்தொகை ரூ.10 லட்சத்திற்கு மேலும் மற்றும் சேவை தொழில்களுக்கு திட்டத் தொகை ரூ.லட்சத்திற்கு மேலும் இருப்பின் அத்தகைய திட்டங்களுக்கு கடனுதவி பெறவிரும்புவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 18 வயது நிரம்பியவர்கள் இதில் பயன் பெறலாம்.

தனிநபர் தொழில் முனைவோர்கள்உற்பத்தி கூட்டுறவுசங்கங்கள்சுய உதவிக் குழுக்கள்அறக்கட்டளைகள் ஆகியோர் இத்திட்டத்தில் பயன் பெறலாம். பொதுப்பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் துவக்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்டகடன் தொகையில் 15 சதவிகிதமும்ஊரக பகுதியில் தொழில் துவக்கும் பட்சத்தில் 25 சதவிகிதம் மானியமும் வழங்கப்படும். சிறப்பு பிரிவினர்களான பிற்படுத்தப்பட்டதாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்சிறுபான்மையினர்மகளிர்முன்னாள் படைவீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புறத்தில் தொழில் துவக்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்டமதிப்பீட்டு தொகையில் 25 சதவித மானியமும்ஊரக பகுதியில் தொழில் துவக்கும் பட்சத்தில் 35 சதவித மானியமும் வழங்கப்படும்.
தென்னை, நார், கயிறு மற்றும் கயிறு, துகள் கட்டிகள், முந்திரி பதப்படுத்துதல், சிறுதானியங்களிலிருந்து உணவுப்பொருட்கள் தயாரிப்பு, கேக் மற்றும் பிஸ்கட் தயாரிப்பு, உணவுப்பொருட்கள் தயாரிப்பு, அயோடின் உப்பு தயாரிப்பு, இரும்பு பர்னிச்சர் தயாரிப்பு, ஹலோபிளாக் தயாரித்தல், பிளே ஆஸ் செங்கல் தயாரித்தல், கருவேல மரத்தூள்கலிருந்து தயாரிக்கப்படும் எரிப்பொருள் கட்டி தயாரித்தல், பிவிசி பைப் தயாரித்தல்,நோட்டு புத்தங்கள் தயாரித்தல், அட்டைப்பெட்டிகள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், டிஜிட்டல் பிரிண்டிங், பிளக்ஸ் பேனர், அழகுநிலையம், உலர் சலவையகம், வீல் அலையன்மெண்ட் போன்ற தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம்.

ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்டதொழில் மையஅலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம். தொலைபேசிஎண்;. 04567 -230497. www.kviconline.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, விண்ணப்ப நகலை மாவட்டதொழில் மைய அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் போக்குவரத்து பாதிப்பு, தற்காலிக டிரைவர்கள் வைத்து சரி செய்ய முயற்சி!!

No comments :
தமிழகத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரமடைந்து வரும் போராட்டத்தின் எதிரொலியாக மாவட்டத்தில் நேற்று முன்தினம் பஸ்போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டாலும் முக்கிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

மேலும் மாலை நேரத்திற்கு பின்னர் நிலைமை மோசமாக இருந்தது. இந்தநிலையில் அரசு மேற்கொண்ட மாற்று நடவடிக்கையின் பயனாக அனைத்து பகுதிகளிலும் தற்காலிக (மாற்று) டிரைவர்கள் பணியமர்த்தப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், கலெக்டர் நடராஜனுடன் இணைந்து புதிய பஸ் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்தநிலையில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அரசை கண்டித்தும், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)