முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 21, 2017

10ம் வகுப்பு தேர்வில், மாநில அளவில் 3வது இடம்!!

No comments :


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 3-வது இடம் பிடித்துள்ளது. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள், மாணவ-மாணவிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் பாராட்டினார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17,979 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினர். இதில் 17,648 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 98.16 சதவீதம் பெற்று மாநில அளவில் 3-வது இடம் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நடராஜன், முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணுவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் இத்தகைய முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைத்த ஆசிரிய-ஆசிரியர்களையும், மாணவ-மாணவிகளையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.



தேர்வு வைக்கப்பட்ட பாடங்களுக்கு அன்றைய தினமே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கி அவற்றில் பெற்றோர்களின் கையொப்பம் பெறப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும் தலைமை ஆசிரியரால் இப்பணி ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு பாடத்திற்கும் மாதத்திற்கு நான்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தேர்வுகள் நடத்தப்பட்டன.

வினா தொகுப்பு

முதல் பருவத்தேர்வு, காலாண்டு தேர்வு, 2-ம் பருவத்தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் முதல் திருப்புதல் தேர்வு ஆகியவை முடிந்த பின்னர் ஆலோசனை கூட்டம் பாட ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு ஒவ்வொரு தேர்விலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் முன்னேற்றம் அடைந்தது. பாட ஆசிரியர்களால் ஒரு மதிப்பெண் மற்றும் 3 மதிப்பெண் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றின் மூலம் மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்கப்பட்டு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ச்சியில் மாணவர்கள் முன்னேற்றம் அடைந்தனர்.

மாநில பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம் வழங்கப்பட்ட வினா தொகுப்பு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு அதன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.

இத்தகைய நடவடிக்கைகளின் பயனால் தான் மாநிலத்தில் 3-வது பிடிக்க முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமநாதபுரம் ராமர், பரமக்குடி பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி: தினத்தந்தி


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)