முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 30, 2017

ராமநாதபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை, ஒருவர் கைது!!

No comments :
ராமநாதபுரம் பஜார் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவருடைய உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்திமதிநாதன் தலைமையில் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் உள்ளிட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.


அப்போது கரிக்கடை சந்து பகுதியில் உள்ள ஒரு கடையில் ஏராளமான அளவில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 17 கிலோ புகையிலை பொருட்களையும், 9 கிலோ வாசனை புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக எக்ககுடியை சேர்ந்த தற்போது ராமநாதபுரம் பாரதிநகரில் வசித்து வரும் வியாபாரி ஆசாத்கான்(வயது34) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தனது கடையில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

53 வருடங்களுக்கு பிறகு தனுஷ்கொடிக்கு அரசு போக்குவரத்து!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தின் தீவுப்பகுதியான ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தனுஷ்கோடி. மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கிய தனுஷ்கோடி கடந்த 1964–ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய புயலால் கடல் கொந்தளித்து, முழுமையாக அழிந்து போனது. 


அதுவரை அங்கிருந்த ரெயில் நிலையம், கோவில், தபால் அலுவலகம், குடியிருப்புகள் என எல்லாமே முற்றிலும் சிதைந்தன.

இலங்கையோடு வர்த்தக தொடர்பு கொண்டிருந்த தனுஷ்கோடி, 1964 புயலுக்குப்பின் மக்கள் வாழ்வதற்கு அஞ்சும் இடமாக மாறி விட்டது. எனினும், சுற்றுலா பயணிகள் மட்டும் அழிந்து போன தனுஷ்கோடியை பார்த்து வருகிறார்கள்.

ராமேசுவரத்தில் இருந்து முகுந்தராயர் சத்திரம் வரை மட்டுமே அவர்களால் வாகனங்களில் செல்ல முடிந்தது. அதற்குப்பின் இருபுறமும் கடல் அலைகள் மோதிக்கொண்டிருக்க, ஒரு நீண்ட வால் பகுதி நிலப்பரப்பு மட்டுமே தனுஷ்கோடியின் கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை நீண்டிருந்தது.

எனவே, முகுந்தராயர்சத்திரம் வரை வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் அதன்பின், 9½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றோ அல்லது குறைந்த அளவு கடல் நீரில் தட்டுத் தடுமாறிச் செல்லும் ஜீப் அல்லது வேன்களில் சென்றோ தான் தனுஷ்கோடியை பார்த்து வந்தனர்.

இந்தநிலையில், தனுஷ்கோடியை புயல் விழுங்கி 50 ஆண்டுகளுக்குப்பின், அதை புனரமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது. அதன்படி, முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடியின் கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை கடற்கரை வரை கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.71 கோடி செலவில் கடந்த 2015–ம் ஆண்டு தொடங்கியது.

முதல் கட்டமாக, முகுந்தராயர்சத்திரத்தில் இருந்து கம்பிப்பாடு வரையும், 2–வது கட்டமாக கம்பிப்பாட்டில் இருந்து அரிச்சல்முனை வரையும் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

கடந்த 27–ந் தேதி அப்துல்கலாம் மணிமண்டபத்தை திறந்து வைக்க ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திரமோடி, தனுஷ்கோடி சாலையையும் போக்குவரத்துக்காக திறந்து வைத்தார்.

இதையடுத்து புதிய சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ராமேசுவரம் கோவிலுக்கு வந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அரிச்சல்முனை கடற்கரை வரை வந்து சென்றனர்.

சுற்றுலா பயணிகள் இருதிசையிலும் கடலின் அழகைப் பார்த்து வியந்து, கடலில் இறங்கி நின்றும், சாலையில் நின்றும் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். புதிய சாலை திறக்கப்பட்டதையடுத்து, 53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு அரசு பஸ்களும் இயக்கப்பட்டன.

ராமேசுவரம் கோவிலில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை இந்த பஸ்கள் ஓடுகின்றன. 45 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த பஸ்களில் பயணம் செய்து தனுஷ்கோடியை பார்த்து திரும்புகின்றனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)