முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 28, 2017

ராமநாதபுரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லை!!

No comments :

ராமநாதபுரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரத்தை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ள நிலையில், மதுரை, ராமேஸ்வரம் உட்பட வெளியிடங்களுக்கு செல்வதற்கு ஏராளமான பயணிகள் தினந்தோறும் ராமநாதபுரம் வருகின்றனர். 

ரயில் நிலையத்திலும் பேருந்து நிலையத்திலும் பயணிகள் உட்காருவதற்கு போதுமான வசதிகள் இருந்தாலும் மேற்கூரைகள் குறைவான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதால் திறந்தவெளியில் நிற்க வேண்டியுள்ளது. இருக்கின்ற சேர்களுக்கு அருகில் தெருநாய்கள் உறங்குகின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடன்  வரவேண்டியுள்ளது. 

இதுதவிர  பயணிகளுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதிகள் எதுவும் முறையாக செய்துதரப்படவில்லை. கழிவறைகள் கட்டப்பட்டும் தண்ணீர் வசதி இல்லாததால் அவைகள் பூட்டியே கிடக்கின்றன. இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிவது கிடையாது.

இதனால் இரவில் வரும் பயணிகள் கடும் சிரமம் அடைந்து  வருகின்றனர். தெருநாய்கள் உள்ளே வருவதை தடை செய்தும், அடிப்படை வசதிகளை அதிகரிக்கவும் பயணிகள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.


செய்தி: திரு. தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டத்தில் கீழ் ரூ. 10 லட்சம் வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :
அனைத்து பகுதி மக்களுக்கும் சுயவேலைவாய்ப்பை அளிக்கவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் அவர்களது பொருளாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கிலும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வித்தகுதி தேவையில்லை. வயது வரம்பு ஏதுமில்லை. வருமான உச்சவரம்பு இல்லை. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க அரசு மானியத்துடன் வங்களின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

 இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச திட்டத்தொகையாக ரூ.25 லட்சமும்,
சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு திட்ட தொகை ரூ.10 லட்சத்திற்கும் மேலும் சேவை தொழில்களுக்கு திட்ட தொகை ரூ.5 லட்சத்திற்கு மேலும் இருப்பின் அத்தகைய திட்டங்களுக்கு கடனுதவி பெற விரும்புவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 18 வயது நிரம்பியவர்கள் இதில் பயன் பெறலாம்.

தனிநபர் தொழில் முனைவோர்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், சுய உதவி குழுக்கள், அறக்கட்டளைகள் ஆகியோர் இத்திட்டத்தில் பயன் பெறலாம். பொதுப்பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் துவக்கும்பட்சத்தில் அவர்களுக்கு திட்டகடன் தொகையில் 15 சதவிகிதம் மானியமும், ஊரகப் பகுதியில் தொழில் துவக்கும் பட்சத்தில் 25 சதவிகிதம் மானியமும் வழங்கப்படும்.

சிறப்புப்பிரிவினர்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புறத்தில் தொழில் துவக்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்டமதிப்பீட்டுத் தொகையில் 25 சதவிகிதம் மானியமும், ஊரகப் பகுதியில் தொழில் துவக்கும்பட்சத்தில் 35 சதவிகிதம் மானியமும் வழங்கப்படும்.

தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசிஎண். 04567- 230497.


புதிதாக உற்பத்தி மற்றும் சேவை தொழில் ஆரம்பிக்க தக்க சான்றுகளுடன் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று http://www.kviconline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரிசீயன் பயிற்றுநர் பணி வாய்ப்பு!!

No comments :
ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பில் செயல்படும் மின்சாரப்பணியாளர் தொழிற்பிரிவின் இளநிலை பயிற்சி அலுவலர் பணி தற்காலிகமாக பயிற்றுநர் நிலையில் ஒரு பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் பொதுப்பிரிவினர் முன்னுரிமையில் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இப்பணிக்கான கல்வித்தகுதி எலக்ட்ரிசீயன் தொழிற்பிரிவில் என்டிசிஎன்ஏசி அல்லது பட்டயப்படிப்பு இஇஇ படித்திருப்பதோடு குறைந்தபட்சம் வருடம் நன்கு பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும். இப்பதவிக்கு விண்ணப்பிப்போர் ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இந்த பயிற்றுநர் பதவிக்கு மாதம் தொகுப்பூதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். 
இந்த பயிற்றுநர் பதவியானது முற்றிலும் தற்காலிகமானது. இதனைக் கொண்டு எவ்வித முன்னுரிமையும் கோர இயலாது. பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளோர் தங்களது சுய விபரங்களை பூர்த்தி செய்து செப்.15ம் தேதிக்குள்
முதல்வர்,
அரசு தொழிற்பயிற்சி நிலையம்,
ராமநாதபுரம்


என்ற முகவரிக்கு அனுப்பலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)