முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 28, 2017

ராமநாதபுரம் நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசல், மக்கள் அவதி!!

No comments :
ராமநாதபுரம் நகரில் சாலை ஒரங்களில் வாகனங்களை நிறுத்தி 
செல்வதால், தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

மதுரை -ராமநாதபுரம் சாலை, ராமநாதபுரம் -ராமேஸ்வரம் சாலை களில் போக்குவரத்து அதிகளவில் உள்ளன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், வாகனங்களில் செல்லும் போது, சாலைகளில் நிறுத்தி பயணிகளை இறக்கும் பஸ்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஐந்து நிமிடங்களில் கடக்க வேண்டிய சாலை 30 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது. 

பஜாரில் கடைகளுக்கு வரும் மக்கள் தங்களது நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்களை வணிக நிறுவனங்களின் முன்பாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக சாலை ஓரங்களில், இந்த வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றன. 

சாலை ஓரத்தில் நிறுத்தி பயணிகளை இறக்க வேண்டிய பஸ்கள் நடு ரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்குகின்றனர். பஸ் நிற்பதால், அதற்கு பின் வாகனங்கள் வேறு வழியில்லாமல் அதன் பின் நிறுத்தப்படுகின்றன. இப்படி தொடர்ந்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.

பயணிகளை நடு ரோட்டில் நிறுத்தி இறக்கும் பஸ்களை ஒரமாக நிறுத்த சொல்ல முடியாத நிலையில் போலீசார் உள்ளனர். சாலையோர பகுதிகளில் ஏற்கனவே வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. 

இதன் காரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. ஒரு புறம் பஸ் செல்வதற்கும், வருவதற்கும் வழி இருந்தும் இரு புறமும் ரோடுகளில் வாகனங்களை நிறுத்திக் கொண்டால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளன.
இதனை போலீசார் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

மதுரை, ராமேஸ்வரம் மெயின் சாலையில் திருமண மண்டபங்கள் அதிகளவில் உள்ளன. விசேஷ நாட்களில் திருமண மண்டபத்திற்கு வரும் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால், சாலையோரங்களில் 
நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து போலீசார் முறைப்படுத்த வேண்டும்.

சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை நிறுத்த விடாமல் செய்ய வேண்டும். வணிக வளாகங்களுக்கு செல்பவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். குறுகலான சாலைப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது. 

அரசு, தனியார், மினி பஸ்கள் பயணிகளை இறக்கி, ஏற்றுவதற்கு சாலையோரங்களில் அகலமான இடங்களில் பஸ் நிறுத்தம் மாற்றம் செய்து, சாலையின் ஓரத்தில் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். சாலையின் நடுவே தடுப்பு கம்பங்கள் அமைத்து, வாகனங்களை முறைப்படுத்தி இயக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)