முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! இந்த நானில மாந்தருக் கெல்லாம்.

Monday, November 6, 2017

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கழிவு நீர் தேக்கம், அபராதம் விதிப்பது யார்?!!

No comments :
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு காரணமாக கழிவு நீர் தேங்கியுள்ளது. அபராதம் விதிக்கும் கலெக்டர் அலுவலகமே இப்படி டெங்கு கொசு உற்பத்தியாகும் இடமாக உள்ளது.

ராமநாதபுரம் பகுதியில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இயல்பான அளவை காட்டிலும், 50 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. இந்நிலையில் மழை நீர் ஆங்காங்கே தேங்கிய நிலையில் உள்ளது. இதற்கான காரணம் முறையான மழை நீர் வடிகால் ராமநாதபுரம் நகரில் இல்லை. இதன் காரணமாக சாக்கடை கழிவு நீர் பாதாள சாக்கடை மூலம் செல்கிறது.

மழை நீர் வடிகால் அமைத்து தண்ணீர் தேங்காமல் செல்ல இன்று வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக பல பகுதிகளில் மழை நீர் சாலைகள், தெருக்களில் தேங்கியுள்ளது. இதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் அகற்றம் டேங்கர்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகிறது. இது தற்காலிக தீர்வு மட்டுமே.


இந்நிலையில் கலெக்டர், சுகாதாரத்துறை அலுவலர்கள், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் குழு தினசரி ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். இதில் தங்களது வீடுகளில் சுற்றுப்புறத்தை சுகாதாரக்கேடாக வைத்திருப்பவர்கள், டெங்கு கொசு உற்பத்தியாக ஏதுவாக இருக்கும் பகுதிகளில் காரணமானவர்கள் மீது அபராதம் விதிக்கின்றனர்.

அதே போல் அரசு அலுவலங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழை நீரால், டெங்கு கொசு உற்பத்தியாகாதா? அதற்கு காரணமானர்கள் மீது அபராதம் விதிக்கப்படுமா? பொதுமக்கள் மீது மட்டும் அதிரடியாக அபராதம் விதித்து வசூலிக்கும் அதிகாரிகள், தங்களில் அலுவலகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டாமா?

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய கலெக்டர் அலுவலகத்திலேயே மழை நீர்வடிகால் அடைப்பு காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது.


இதில் டெங்கு கொசு உற்பத்தியாகி, இங்கு பணியாற்றும் அலுவலர்கள், பொதுமக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து கலெக்டர் அலுவலகப்பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால்களை துார் வாரி, மழை நீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படாமல் பாது காக்க முன் வரவேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் பாலிதீன் பைகளுக்கு தடை!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சியில் பாலிதீன் கப், பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நவ., 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சிப்பகுதியில் கழிவு நீர் வடிகால் முறையாக இல்லை. இதன் காரணமாக ரோடுகளில் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதில் பாலிதீன் கப், பைகள் பயன்பாடு அதிகம் உள்ளதால், பல பகுதிகளில் டெங்கு கொசுப்புழுவான 'ஏடிஸ்' உருவாக காரணமாகிறது.
நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோவன் தெரிவித்ததாவது: 

கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்களில் பாலிதீன் பயன்படுத்த கலெக்டர் நவ., 1 முதல் தடை விதித்துள்ளார். நவ., 15 ம் தேதி வரை சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தி பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பாலிதீன் பை பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)