முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 29, 2017

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், கூடுதல் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை!!

No comments :


ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுவதால், கூடுதல் டாக்டர்கள், மருந்தாளுநர்களை நியமிக்க வேண்டும். ஆன்லைன் கம்ப்யூட்டர் பதிவையும் துரிதப்படுத்த வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகள், உயர் அழுத்த நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு என தனியாக நோட்டுகள் பதிவு செய்யப்பட்டு அதில் 15 நாட்களுக்கு ஒரு முறை மாத்திரை மருந்துகள் வழங்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வரும் இந்த நோயாளிகளை டாக்டர்கள் பரிசோதனை செய்து மீண்டும் மருந்து, மாத்திரைகள் வழங்க பரிந்துரை செய்வர்.

நாளுக்குநாள் மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் இவர்களை பரிசோதிக்கும் டாக்டர்களும், மாத்திரைகள் வழங்கும் மருந்தாளுநர்களும் சிரமப்படுகின்றனர். மருந்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் டாக்டர்கள் நோயாளிகளை பரிசோதிக்காமலேயே மருந்து, மாத்திரைகளுக்கு பரிந்துரைக்கும் நிலை உள்ளது. மருந்தாளுநர்களுக்கு ஏற்கனவே பணிச்சுமை உள்ள நிலையில் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் மூலம் தற்போது பணியாற்றும் மருந்தாளுநர்களை குறைக்கும் திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. அதனால் மேலும் நோயாளிகள் அவதிப்பட நேரிடுவர்.

தற்போது நோயாளிகளுக்கு சீட்டு வழங்குவது முதல் மருந்து, மாத்திரைகள், ஊசி வழங்குவது வரை ஆன்லைனில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுவதால் அதற்கு காலதாமதம் ஆகிறது. அதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால் ராமநாதபுரம் உட்பட மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு போதிய டாக்டர்கள், மருந்தாளுநர்களை நியமித்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், அரசு மருத்துவமனைக்கு சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். அதற்கேற்ப டாக்டர்கள் மருத்துவமனையில் பணியில் கிடையாது. ஒருசிலர் விடுமுறை எடுத்துசென்று விடுவதால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடும் மருத்துவமனை நிர்வாகம் செய்வது இல்லை. இதனால் நோயாளிகள் கடும் சிரமம் அடைகின்றனர். நோயாளிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் டாக்டர்களை அரசு நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)