(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 19, 2018

ராமநாதபுரம் அம்மா பூங்காவை சீரமைக்க கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சியை ஒட்டிய பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா பராமரிப்பின்றி உருக்குலைந்து வருவதால், இதனை சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகப் பகுதியில் சாக்கடை நீர் தேங்கும் இடமாக இருந்ததை, முந்தைய கலெக்டர் நந்தகுமார் முயற்சியால் பூங்காவாக மாற்றப்பட்டது.
அன்வர்ராஜா எம்.பி., நிதி, ஊரக வளர்ச்சி முகமை நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளை பயன்படுத்தி இதுவரை பூங்கா சீரமைப்பிற்காக 1.60 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது.

இந்த பூங்காவின் உள்பகுதியை சுற்றிலும் நடைபயிற்சி செய்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பூங்கா நடுவில்
சமீபத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. மேலும், உள்பகுதியில் ஊஞ்சல், சறுக்குகள், பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பூங்காவின் கிழக்கு பகுதி தெற்கு மூலையில் உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டன.

இவை சேதமடைந்த நிலையில், இரண்டுமுறை சரி செய்யப்பட்டது. தரமற்ற பணியால் தற்போது, மூன்றாவது முறையாக உடற்பயிற்சி சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன.

இந்த பூங்காவிற்குள் தான் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவிற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு நடந்தது.
அப்போது, இங்கு வந்த கூட்டத்தால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நன்றாக வளர்ந்திருந்த பல மரங்கள் அழிக்கப்பட்டன. மேலும், பூங்கா முழுவதும், கரடு முரடாக, பந்தல் குழிகள் தோண்டப்பட்டது கூட இன்னும் அப்படியே விடப்பட்டுள்ளது.

இங்குள்ள ஊஞ்சல்கள், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் முழுமையாக சேதமடைந்த நிலையில், தற்போது வெறும் காட்சிப் பொருளாகத்தான் பூங்கா உள்ளது.

மொத்தத்தில் பூங்கா தற்போது, பயனற்ற நிலைக்கு மாறிவிட்டது. நகர மக்களின் ஒரு பொழுது போக்கு இடமான அம்மா பூங்காவை சீரமைக்க வேண்டும்என்பதே மக்களின் விருப்பம்.

செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment