(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 5, 2018

சிறு வணிகர்களுக்கு பிணையமின்றி முத்ரா கடன் உதவி - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறு வணிகர்களுக்கு பிணையமின்றி முத்ரா கடன் உதவி வழங்கும் திட்டத்தில் கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில், மாவட்டத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் தொடர்பாக வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-  

மத்திய அரசு, மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் சிறு தொழில் செய்யும் நபர்களுக்கு பிணையம் இல்லாமல் எளிதில் கடனுதவி பெற்று பயனடையும் வகையில் முத்ரா திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை, வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் சிறு வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சிசு திட்டம், கிஷோர் திட்டம், தருண் திட்டம் என 3 விதமாக  பிணையம் ஏதுமின்றி கடனுதவி வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சிசு திட்டத்தின் கீழ் ரூ.50ஆயிரம் வரையிலும், கிஷோர் திட்டத்தின் கீழ் ரூ.50ஆயிரத்திற்கு மேல் ரூ.5லட்சம் வரையிலும், தருண் திட்டத்தின் கீழ் ரூ.5லட்சத்திற்கு மேல் ரூ.10லட்சம் வரையிலும் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 18 முதல் 55 வயது வரையிலுள்ள நபர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள்.  கல்வித்தகுதி கட்டாயமில்லை.  சிறு தொழில் செய்து வரும் நபர்கள் தொழிலை விரிவுப்படுத்துவதற்காகவும், புதிதாக சிறு தொழில் துவங்க விரும்பும் நபர்களும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2016-2017-ஆம் நிதியாண்டில் 61ஆயிரத்து 482 பயனாளிகளுக்கு ரூ.190.69 கோடி மதிப்பிலும்,
2017-2018 ஆம் நிதியாண்டில் 47ஆயிரத்து 682 நபர்களுக்கு ரூ.161.53 கோடி மதிப்பிலும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய அரசு அலுவலகங்களிலும், அனைத்து வங்கிகளிலும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, நிரந்தர வங்கி எண் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றை தாங்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ள வங்கிகள் அல்லது தங்கள் அருகில் உள்ள வங்கிகளில் சமர்ப்பித்து பயனடையலாம். பயனாளிகள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்கு அந்தந்த வங்கி கிளைகளில் அதற்கான ஒப்புகை ரசீதும் வழங்கப்படும்.  
 ஏழை, எளியோருக்கு பிணையம் ஏதுமின்றி கடனுதவி வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தினை வங்கியாளர்கள் மேலும் சிறப்பாக செயல்படுத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.  பயனாளிகள் இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறுபேசினார்.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment