Thursday, March 22, 2018
ராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலகத்தில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள்!!
ராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலகத்தில் தரமற்ற பணிகளால்
கழிப்பறைகள் சேதமடைந்தும், செப்டிக் டேங்க் நிறைந்து வெளியேறுவதால்
துர்நாற்றம் வீசுகிறது. பணியாளர்கள் அடிப்பபடை தேவைகளுக்கு திண்டாடும் நிலைதான் உள்ளது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 11 கோடி ரூபாயில் புதிய ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம், கட்டப்பட்டு 2016 பிப்.2 ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெ., 27.2.2016ல் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஆனாலும், 2017 இறுதி வரை இந்த கட்டடத்தின் பணிகள் நிறைவடையவில்லை.
கட்டடப்பணிகளை செய்த பொதுப்பணித்துறையினர் இப்பணிகளில் சுணக்கம் காட்டினர். மின் சாதனங்கள் பொருத்த வேண்டும். மேஜை, நாற்காலிகள், அறைகலன்கள் பொருத்த வேண்டும், எனக்கூறி அவ்வப்போது வேலை செய்து வந்தனர். 2018 துவக்கத்தில்தான் பெரும்பாலான அலுவலகங்கள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் கடந்த வாரம் தான் இங்கே மாற்றப்பட்டது. இருந்தாலும், இன்னும் சில வேலைகள் நடந்துகொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், அலுவலகங்கள் செயல்படத் துவங்கி நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் கழிப்பறைகள் பல சேதமடைந்துவிட்டன. கதவுகள் உடைந்துள்ளன. முதல் தளம், இரண்டாம் தளம் கழிப்பறைகளில் இருந்து கட்டடத்தில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. அந்த தண்ணீர் கீழ் அறையில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மேல் விழுகிறது.
மேலும், கட்டடத்தில் புழக்கத்திற்கு தேவையான தண்ணீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் தேவைக்கு காவிரி குடிநீர் இணைப்பும் இல்லை. இங்குள்ள நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை. கலெக்டர் அலுவலகம் வரும் மக்களுக்கும், பணியாளர்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லை.
பின் பகுதியில் உள்ள செப்டிக் டேங்க் நிறைந்து வெளியேறியதால் குளம் போல் தேங்கி நோய்பரப்பி வருகிறது. பொதுப்பணித்துறை கட்டடப்பிரிவின் தரமற்ற கட்டுமானப்பணியால் விரைவில் கட்டடம் உறுதித் தன்மை இழக்கும் அபாயம் உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவிததனர்.
செய்தி: தினமலர்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment