(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 9, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் இலவச வைபை' வசதியுடன் "ஸ்மார்ட்' வகுப்புகள் - அமைச்சர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, 20 கோடி ரூபாய் செலவில் இலவச வைபை' வசதியுடன் "ஸ்மார்ட்' வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிகணினிக்களை வழங்கும் விழா ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.


விழாவில் கலந்து கொண்டு மடிகணினிக்களை வழங்கி அமைச்சர் மு.மணிகண்டன் பேசியது:

தமிழகத்தில் கடந்த 2011 முதல் 2017 ஆம் ஆண்டு வரை 38.40 லட்சம் மாணவ, மாணவியர்க்கு அரசின் சார்பில் விலையில்லா மடிகணினிக்கள் வழங்கப்பட்டுள்ளது, தமிழக அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் தங்களைத் தயார் செய்து கொள்ள ஏதுவாக தொடுவானம் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஒரு பயிற்சி நிலையம் என்ற அடிப்படையில் 11 பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி நிலையங்களில் நீட் தேர்வுக்காக பதிவு செய்யப்பட்ட 271 பேருக்கும் விலையில்லா மடிக்கணினிக்கள் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பத்துறையின் மூலம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் பெறப்பட்டு, குறைந்த கட்டணத்தில் தரமான முறையில் தொலைக்காட்சி சேனல்களை அரசு கேபிள் நிறுவனம் செட்டாப்பாக்ஸ் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை , கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் முதல் கட்டமாக அம்மா வைபை மண்டலம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, மண்டபம்,ராமநாதபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 39 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் ரூ.20 கோடி மதிப்பில் முதற்கட்டமாக வைபை மற்றும் கணினி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி "ஸ்மார்ட் கிளாஸ்" வகுப்புகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.முருகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஜெகஜோதி, பள்ளித் தலைமை ஆசிரியை ஜெ.விசுவாசம் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment