முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 14, 2018

டாஸ்மாக் ஊழியரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் மதுக்கூட ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மனித உரிமை ஆணையத்தில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த தனியார் மதுபானக் கூடத்தின் ஊழியர் சி.முனியசாமி என்பவர் தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம்:

கமுதியில் உள்ள டாஸ்மாக் கடையுடன் இணைக்கப்பட்ட தனியார் மதுக் கூடத்தில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தேன். கமுதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஆர்.திலகவதி இரண்டு காவலர்களுடன் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி மதுபானக் கூடத்துக்கு வந்தார்.அப்போது, தான் பணியில் சேர்ந்து ஒரு மாதமாகியும், மதுக்கூடத்தின் உரிமையாளர் தன்னை வந்து பார்க்கவில்லை என்று கூறியதுடன், மதுக்கூடத்தின் உரிமத்தைக் காண்பிக்குமாறு என்னிடம் கூறினார். அதுகுறித்து எனக்குத் தெரியாது என்று நான் கூறவே, என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கினார். இதைத் தொடர்ந்து, மதுக் கூடத்தின் உரிமையாளர் முருகேசன் வந்தவுடன் என்னை உதவி ஆய்வாளர் திலகவதி விடுவித்தார். அவர், தாக்கியதில் எனக்கு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. ஆகவே, காவல் உதவி ஆய்வாளர் திலகவதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த மனு குறித்து சென்னை மனித உரிமை ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். அதில், காவல் உதவி ஆய்வாளர் திலகவதி விதிகளை மீறியதுடன், முனியசாமியைத் தாக்கியதும் தெரியவந்துள்ளது. ஆகவே, முனியசாமிக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும். அந்தத் தொகையை உதவி ஆய்வாளர் திலகவதியின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்று நீதிபதி டி.ஜெயச்சந்திரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் பலத்த சுறாவளி காற்று வீசி வருவதையொட்டி பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண்  மூன்று நேற்று ஏற்றப்பட்டது.
 
இந்தியா இலங்கை கடல் பகுதிகளில் மன்னார் வளைகுடா கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனையொட்டி  தமிழக,கேரளா ஆகிய கடலோரப்பகுதியில் மழையுடன் கூடிய  பலத்த சூறாவளி காற்று கடந்த மூன்று நாட்களாக வீசி வருகிறது.இதனால் மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு கடந்த மூன்று நாட்களாக செல்லாமல் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த காற்று நேற்று மாலையில் வழுவடைந்ததையொட்டி மன்னார் வளைகுடா  ஆழ் கடலில் புயல் மையம் கொண்டுள்ளது.இதனையொட்டி கன்னியாகுமாரி,ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் ஆகிய கடலோரப் பகுதியில் காற்றி்ன் வேகம் 50 கி.மீ மேல் அதிகரித்து கடலில் ராட்ச அலை உருவாகியுள்ளது. இதனால் பாம்பன் துறை முகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 3 நேற்று மாலையில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து  ராமேசுவரம்,பாம்பன்  கடல் கரைப்பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், அதுபோல கடலில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக கடலில் நங்கூரமிட்டு  நிறுத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் மீன்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)