முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 21, 2018

தமிழக அரசின் "நீட்ஸ்' திட்டத்தில் ரூ.5 கோடி வரை கடனுதவி - கலெக்டர்!!

No comments :
தமிழக அரசின் "நீட்ஸ்' திட்டத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் துவங்கிட நீட்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசால் 25 சதவிகித மானியத்துடன் மாவட்டத் தொழில் மையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நடப்பாண்டில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ரூ.190 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி கடன்பெற பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. ஆகிய ஏதேனும் ஒரு கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் வயது 21 முதல் 35 வயது வரையும், மற்ற சிறப்புப்பிரிவினர் 21 வயது முதல் 45 வயது வரையும் இருக்க வேண்டும்.

வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை.


இத்திட்டத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் 5 கோடி வரையுள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு மட்டும் வங்கிகளின் மூலம் கடனுதவி அளிக்கப்படுகிறது. அதிக பட்ச மானியத் தொகையாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் தவணை தவறாது கடனை திருப்பி செலுத்துவோருக்கு 3 சதவிகித வட்டி மானியமும், 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இத்திட்டத்தின் மூலம் கடன் பெறுவதற்கு தொழில் முனைவோருக்கு கட்டாய பயிற்சி 15 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்வலை பின்னுதல், முந்திரி பதப்படுத்துதல், கடல்சார் உணவுப்பொருட்கள் பதப்படுத்துதல், சிறுதானியங்கள் மூலம் உலர்ந்த மாவுப்பொருட்களை தயார் செய்தல், தேங்காய் எண்ணெய் தயார் செய்யும் தொழிற்சாலைகள் தொடங்குதல், ஏற்றுமதி தரம் வாய்ந்த தென்னை நாரைப் பயன்படுத்தி மெத்தைகள் தயார் செய்தல், கூலிங் ஆஸ்பெஸ்டாஸ் சீட் தயார் செய்தல், கனரக வாகனங்கள் பழுதுபார்த்தல், வீல் அலைன்மென்ட், தரை ஓடுகள் தயாரிப்பு. உணவகங்கள், மருத்துவமனைகள் போன்ற தொழில்கள் தொடங்கிட அதிகமான அளவில் வாய்ப்புள்ளது.

மேலும் விபரங்களுக்கு
பொதுமேலாளர்,
மாவட்டத் தொழில் மையம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
ராமநாதபுரம்

என்ற முகவரியில் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி; தினசரிகள்(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)