முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, June 26, 2018

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவித்தல், பெண் சிசுவதையை ஒழித்தல், ஏழை குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல், பெண் குழந்தைகளின் மதிப்பை உயர்த்துதல், பெண் குழந்தைகளின் உயர்கல்வியை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களை உள்ளடக்கிய முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


குடும்பத்தில் தாய் ஒரே ஒரு பெண் குழந்தையுடன் கருத்தடை செய்துள்ளார் எனில் அப்பெண் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகளுடன் கருத்தடை செய்துள்ளார் எனில் 2 பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் நிலை வைப்புத் தொகை ரசீது வழங்கப்பட்டு அக்குழந்தைகளின் 18 வயது முடிவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த பின் முதிர்வுத்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கருத்தடை செய்து கொள்ளும் தாயின் வயது 35-க்குள் அல்லது இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் வருமானச்சான்று, இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, குழந்தைகளின் பிறப்புச் சான்று, தாய், தந்தை வயதுச் சான்று அல்லது கல்விச் சான்று, தாய் கருத்தடைச் சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, 10 ஆண்டு வசிப்பிடச் சான்று, குடும்ப புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.


மேலும் விண்ணப்பங்களை அவர்கள் சார்ந்துள்ள வட்டார, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விரிவாக்க அலுவலர்களிடம் தரலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கல்வி நிறுவன கட்டட அனுமதி பெற விண்ணப்பிக்க செப்.,13 கடைசி நாள்!!

No comments :

அனுமதி பெறாத கல்வி நிறுவன கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு செப்.,13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், 1.1.2011க்கு முன் செயல்பட்டு வரும் கல்வி நிறுவன கட்டடங்களுக்கு நகர் ஊரமைப்புத்துறையின் அனுமதி பெற வேண்டும். வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில், ஜூன் 14ல் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

செலுத்த வேண்டிய ஒருமுறை கட்டணம், சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள், அனுசரிக்க வேண்டிய சட்டங்கள் மற்றும் விதிகள், விண்ணப்பிக்க அவகாசம் போன்ற விவரங்கள் அரசாணையில் தெளிவாக உள்ளன. www.tn.gov.in/tcp என்ற இணையதளத்தில் அரசாணை நகல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த இணையதளம் வழியாக விண்ணப்பித்து, உரிய கட்டணத்தையும் செலுத்தலாம். செப்.,13 விண்ணப்பிக்க கடைசி நாள்.

இதனை பயன்படுத்த வேண்டும், என சிவகங்கை மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் பரமேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதே போல், கட்டட வடிவமைப்பாளர், கட்டமைப்பு பொறியாளர் மற்றும் கட்டட உரிமம் பெற்ற வரைவாளர்கள், பணி முடிவு சான்று வழங்கும் குழுவில் உறுப்பினராக ஜூன் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என கூறியுள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)