முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 13, 2018

ராமேசுவரத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்; நீதிபதி ஆய்வு!!

No comments :
ராமேசுவரத்துக்கு தர்ப்பண பூஜைகள், தில ஹோம பூஜைகள், தோ‌ஷ நிவர்த்தி பூஜைகளுக்கு பக்தர்களிடம் புரோகிதர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. கட்டணம் நிர்ணயித்தும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் இருந்தனர். இந்த பகல் கொள்ளையால் பக்தர்கள் மனம் புழுங்கி வந்தனர்.
இதே போல் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராட பக்தர் ஒருவருக்கு திருக்கோவில் நிர்வாகத்தால் ரூ.25 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கூடுதலாகவே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இதுபற்றி திருக்கோவில் அதிகாரிகளுக்கு முழுமையாக தெரிந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர் என்றும் பக்தர்கள் மனம் வெதும்பினர்.


இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவிலுக்குள் ஆய்வு செய்ததுடன் பக்தர்கள் மற்றும் புரோகிதர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அவருடன் இலவச சட்ட உதவி சார்பு நீதிபதி ராமலிங்கம், ராமேசுவரம் நீதிபதி ஸ்ரீதேவி ஆகியோரும் வந்திருந்தனர்.
அதிரடி ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விக்கணை தொடுத்தனர். அதற்கு பதில் சொல்ல முடியாமல் புரோகிதர்கள் திக்குமுக்காடினர். சிலர் நீதிபதிகளைக்கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டனர்.
விசாரணையில் பூஜைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதும், தீர்த்தமாட பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதும் தெரியவந்துள்ளது. நீதிபதியின் ஆய்வறிக்கை ஐகோர்ட்டில் விரைவில் சமர்ப்பிக்கப் படவுள்ளது.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

மானிய விலையில் வேளாண் கருவிகள், ராமநாதபுரத்தில் 25 கிராமங்கள் தேர்வு!!

No comments :
விவசாயிகள் நலவாழ்வு இயக்கத்தின் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்படுகின்றன.

நமது ராமநாதபுர மாவட்டத்தில் புல்லங்குடி, வன்னிவயல், அலமனேந்தல்,பெரியபட்டினம், தளிர்மருங்கூர், தேளூர், ஆக்களூர், கட்டவளாகம், கீழப்பனையூர், சீனங்குடி, வெங்காளூர், அரியகுடிபுத்துார், நகரம், ஆட்டாங்குடி, மேலக்கொடுமலுார், குமாரக்குறிச்சி, சடையனேந்தல், கீழராமநதி, காடமங்கலம், ஆணையூர், நகரத்தார்குறிச்சி, காக்குடி, கொக்கரசன்கோட்டை, கொண்டுநல்லான்பட்டி, மேலச் செல்வனுார் ஆகிய 25 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.



இந்த கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர், டிராக்டர்களால் இயங்கும் கலப்பை உள்ளிட்ட 105 வேளாண் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்குவதற்காக 97.05 லட்சம் ரூபாயும், மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் 12 கருவிகள் வழங்க 13.87 லட்சம் ரூபாய் மானியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் டிராக்டருக்கு அதிகபட்சம் 1.25 லட்சம், பவர் டில்லருக்கு 75
ஆயிரம், டிராக்டர் மூலம் இயங்கும் கருவிகள், கலப்பை வாங்க 63 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.


ராமநாதபுரம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 04567-230 543 என்ற தொலைபேசியிலும், பரமக்குடி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 04564-224 044 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் நடராஜன் அறிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

அஞ்சல் துறை வழங்கும் கல்வி உதவித்தொகை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
மாணவர்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், இந்திய அஞ்சல் துறை ''தீனதயாள் ஸ்பார்ஸ் யோஜனா'' திட்டத்தை அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான இத்திட்டத்தில் ஆண்டிற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 6 -9ம் வகுப்புமாணவர்கள் பங்கேற்கலாம். கடைசியாக எழுதிய தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அவர்கள் அஞ்சல் தலை சேகரிப்பு கிளப் உறுப்பினராகவோ, அஞ்சல் தலை சேகரிப்புகணக்கு உள்ளவராகவோ இருத்தல் அவசியம். அஞ்சல் தலை சேகரிப்பு கிளப் அமைக்க பள்ளிகளில் மாணவர்களை ஒருங்கிணைத்து செயல் படலாம்.


இந்த கிளப் அஞ்சல்துறையுடன் இணைந்து அஞ்சல் தலை கண்காட்சி, வினாடி வினா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம். கடிதம் எழுதும் போட்டி, அஞ்சல் தலை வடிவமைத்தல் போட்டியில் பங்கேற்கலாம்.
அஞ்சல் தலை சேகரிப்பு கிளப் உறுப்பினராக உள்ள மாணவர்கள் மட்டும் உதவித்தொகை பெற ஆக.,16க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பின் எழுத்து வடிவ வினாடி வினா போட்டி ஆக.,28ல் நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுவோர் அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த திட்டம்(ப்ராஜெக்ட்) சமர்பிக்க வேண்டும்.

இதில் தேர்வானால்மாதம் 500 ரூபாய் வீதம் ஆண்டிற்கு 6000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும்.

விண்ணப்பங்களை,
அஞ்சலக கோட்டகண்காணிப்பாளர்,
ராமநாதபுரம் கோட்டம்,
ராமநாதபுரம். 623501

என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேணடும், என கோட்ட கண்காணிப்பாளர் உதய்சிங் தெரிவித்துள்ளார்.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)