முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 2, 2018

ராமநாதபுர மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

No comments :
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டார்.

அதன் பின்னர் அவர் கூறியதாவது:–

இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி 1.1.2019–ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2019–ல் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

மாவட்டத்தில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 614 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 57ஆயிரத்து 369 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 11 லட்சத்து 14 ஆயிரத்து 48 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மேலும் 11.1.2018 முதல் 31.8.2018 வரையிலான நாட்களில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 4 ஆயிரத்து 795 வாக்காளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 895 வாக்காளர்கள் இறப்பு காரணமாகவும், 951 வாக்காளர்கள் இரட்டை பதிவு காரணமாகவும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் அதாவது வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சப்–கலெக்டர் அலுவலகங்களிலும், தாலுகா அலுவலகம் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.நகரப்பகுதிகளில் குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கும், ஊரகப்பகுதிகளில் கிராம சபைகளுக்கும் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் வாக்காளர் பட்டியலின் உரிய பாகத்தின் நகல் அளிக்கப்பட்டுள்ளது. வாக்களார் பட்டியல் பெயரை சேர்ப்பதற்கு, இந்திய குடியினராய் இருத்தல் வேண்டும். 1.1.2019 அன்று 18 வயது நிரம்பியவராகவும், பதிவு செய்யக்கோரும் பகுதியில் சாதாரணமாக வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட அல்லது ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 6–ம், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்கப்பட படிவம் 6ஏ–வும், ஒரு சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 8–ம், பெயரை நீக்க படிவம் 7–ம், பெயர், வயது, பாலினம், உறவுமுறை ஆகிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச்செய்ய படிவம் 8ம் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் 1.09.2018 முதல் 31.10.2018 வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

இதேபோல வருகிற 8, 22 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் 6, 13 ஆகிய தேதிகளிலும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைகள் நடத்தப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களுக்கு வாசித்து காண்பிக்கப்படும்.

இதுதவிர வருகிற 9, 23, அக்டோபர் 7, 14 ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு படிவங்கள் பெறப்படும். அனைத்து மனுக்கள் மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு வாக்காளர் பதிவு அதிகரியால் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு 2019 ஜனவரி 4–ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்ஸிலீமா அமாலினி, பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணுசந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, வருவாய் கோட்டாட்சியர் சுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, தேர்தல் தாசில்தார் கல்யாணக்குமார் உள்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)