முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 9, 2018

ராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (அக். 10) தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக, ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், நீட்ஸ் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், வங்கிகளின் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் குறித்து விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெறுகிறது.


இக்கருத்தரங்கினை, ராமநாதபுரம் மாவட்டத் தொழில் மையமும், கதர் கிராமத் தொழில்கள் ஆணையமும் இணைந்து நடத்துகின்றன. இதில், தொழிலில் வெற்றி அடைந்த சாதனையாளர்கள், வங்கி மேலாளர்கள், சிறுதொழில் சங்கத் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலரும் பங்கேற்கின்றனர்.


எனவே, தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, இங்கு வந்து தகுந்த ஆலோசனைகள் பெறலாம் என, அதில் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது!!

No comments :
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை திங்கள்கிழமை உடைத்து திருட முயன்றவரை, ஆட்டோ ஓட்டுநர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இரவு நேரப் பாதுகாப்பு பணிக்கு பாதுகாவலர்கள் இல்லை.இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் ஏ.டி.எம். மையத்திலிருந்து சத்தம் கேட்டுள்ளது. உடனே, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஏ.டி.எம். மையத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு ஒருவர் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணப் பெட்டகத்தை திறந்துள்ளார். அதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர்கள் ஏ.டி.எம். மையத்தை பூட்டிவிட்டு, ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ரயில்வே போலீஸார், அந்த நபரைப் பிடித்தனர்.

மன நோயாளி போல் அந்த நபர் நடந்துகொண்டாலும், திருட்டில் ஈடுபடுவதற்கு முன் கண்காணிப்பு கேமரா மற்றும் இணைப்பு வயர்களை துண்டித்திருப்பது தெரியவந்தது. அந்த மர்ம நபரை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)