முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 16, 2018

அப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது!!

No comments :
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இளைஞர்கள், மாணவர்களுக்கு உத்வேகமாய் விளங்கியவர். ஜனாதிபதி பதவிக்கு புதிய அடையாளம் கொடுத்தவர். அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வலிமையை உலகறியச் செய்தவர். பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கி மாபெரும் விஞ்ஞானியாகவும், பேராசிரியராகவும் பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கியவர்.

அப்துல்கலாம் மறைந்தாலும், அவர் மீது எண்ணற்ற மக்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். நேற்று அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அவரது சொந்த ஊரான ராமேசுவரத்துக்கு பல பகுதிகளில் இருந்தும் மாணவ–மாணவிகள் ஆர்வமாக வந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார்கள். இதையொட்டி ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடம் மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.



அப்துல் கலாமின் நினைவிடத்தில் அவருடைய அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர், அவருடைய மகள் நசீமா மரைக்காயர், ஜெய்னுலாபுதீன், நிஜாமுதீன் உள்பட குடும்பத்தினரும், ஜமாத்தலைவர் அப்துல் ஹமீது உள்பட ஜமாத் நிர்வாகிகளும் சிறப்பு தூஆ செய்தனர்.

அதன் பின்னர் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், தாசில்தார் சந்திரன் ஆகியோர் அப்துல்கலாமின் நினைவிடத்தில் மலர் தூவி பிரார்த்தனை செய்தனர். சென்னை புற்றுநோய் சிகிச்சை மைய டாக்டர் விஜயராகவன், நடிகர் தாமு மற்றும் பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், பள்ளி–கல்லூரி மாணவ–மாணவிகள் வந்து மரியாதை செலுத்தினார்கள். அப்துல்கலாம் நினைவு மண்டபம் முன்பு நின்று உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

இதேபோல அவருடைய சிலை முன்பும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான மாணவ–மாணவிகளும், பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் அப்துல்கலாமின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)