முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, October 21, 2018

சபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேற்று காலை புதிய பஸ் நிலையத்திற்கு திடீரென சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். புதிய பஸ் நிலைய பகுதியில் நகரசபை நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள், சுகாதார மேம்பாடு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் போன்ற பணிகளை ஆய்வு செய்தார். பஸ் நிலைய பகுதிகளில் முழுமையாக ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மாடி பகுதிக்கு சென்று கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். பஸ் நிலைய பகுதியில் பொதுமக்கள் நிற்க கூட முடியாத அளவிற்கு கடைக்காரர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்ததை கண்ட கலெக்டர் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

மேலும், பாலூட்டும் தாய்மார்கள் அறையை மறைத்து அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பழக்கடைகளை அகற்றவும் உத்தரவிட்டார். மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த கடைகளில் இருந்து பழங்கள், பேக்கரி உணவுகள் போன்றவற்றை நகரசபை வண்டிகளில் அள்ளி அப்புறப்படுத்துவதற்கு பதிலாக பயனுள்ள வகையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இலவசமாக அள்ளிக்கொடுத்தார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதன்பின்னர் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு சென்ற கலெக்டர் திரும்பி வந்து பார்த்தபோது மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வைத்திருந்ததை கண்டு ஆத்திரமடைந்த அவர் நகராட்சி குப்பை வண்டிகளை வரவழைத்து ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அள்ளிச்செல்ல உத்தரவிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த முறை ஆய்வின்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்த போதும் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாலும், தொடர் புகார்கள் வந்திருந்ததாலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்த கடைக்காரர்களுக்கு தலா ரூ.1000 வீதம் 10 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.அதன்பிறகு கலெக்டர் வீரராகவராவ் கூறியதவாது:- ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த அலுவலர்கள் மூலமாக அந்தந்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல் சுத்தமாக பராமரித்து சுற்றுப்புற தூய்மை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் தொடர் புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமைதாரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய நிலையிலேயே இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் நகரசபை நிர்வாகத்தின் மூலம் தலா ரூ.1000 வீதம் 10 கடைகளுக்கு மொத்தம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நகரசபை அதிகாரிகள் கவனமாக கண்டிப்புடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.


தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அடுத்தமுறை ஆய்வின்போது ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மறு டெண்டர் விடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நகரசபை துப்புரவு ஆய்வாளர் இளங்கோவன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)