முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 22, 2018

ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!!

No comments :
ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய சாலை மேம்பாலம் அமைக்க அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அடிக்கல் நாட்டி வைத்தார்.

ராமநாதபுரம் -கீழக்கரை சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ரூ.30.74 கோடி மதிப்பில் புதிய சாலை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளுக்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:-

ராமநாதபுரம் மற்றும் உச்சிப்புளி ரயில் நிலையங்களுக்கு இடையே, ராமநாதபுரம் நகரப் பகுதி, ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் பாதுகாப்பு இரயில்வே கடவு உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வசிக்கும் ராமநாதபுரம் நகரப்பகுதியில், இரயில்கள் கடக்கும் நேரத்தில் இந்த இரயில்வே கடவு மூடப்படுவதால் ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் சிரமத்தினை போக்கிடும் விதமாக எனது கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் இந்த இரயில்வே கடவு அருகே புதிய சாலை மேம்பாலம் அமைத்திட உத்தரவிட்டார்கள்.


அதன்படி, நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நில ஆர்ஜிதத்திற்கு ரூ.5.14 கோடி மதிப்பிலும், கட்டுமானப் பணிகளுக்கு தொழில்நுட்ப அங்கீகாரமாக ரூ.25.60 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.30.74 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், இந்த சாலை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படடுள்ளது. இம்மேம்பாலமானது, மொத்தம் 675.56 மீட்டர் நீளத்திலும், 11 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படவுள்ளது. அதேபோல, பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை 24 மாத காலத்திற்குள் நிறைவேற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளை விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர, மாவட்டத்தில் ராமநாதபுரம் நகராட்சிகுட்பட்ட பகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலும், ராமமேஸ்வரம் நகரட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.7 கோடி மதிப்பிலும், கீழக்கரை நகராட்சிகுட்பட்ட பகுதியில் ரூ.3 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.20 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேபோல அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையிலான சாலையினை செப்பனிடுவதற்கு  ரூ.30 கோடி மதிப்பில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு நடவடிக்கையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தார். 

இவ்விழாவில், நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்- மதுரை வட்டம்) கண்காணிப்பு பொறியாளர் யு.பழனியப்பன், கோட்டப் பொறியாளர் எம்.ஆர்.கேந்திரதேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.ஜெயஜோதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் என்.ராஜசேகர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)