(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 27, 2019

ராமநாதபுரம் அருகே துப்பாக்கி பதுக்கிய சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் யூனியன், உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசையைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவர் மீது திருட்டு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கும், பிரப்பன்வலசை பிள்ளையார்கோவில் தெருவில் வசித்து வரும் வள்ளி (வயது 42) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் வள்ளி வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து வள்ளியை போலீசார் கைது செய்ததுடன், இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் போலீசாருக்கு மேலும் சில தகவல்கள் கிடைத்தன.இந்த நிலையில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அர்ஜுன்(28), கோவை மாவட்டத்தை சேர்ந்த சங்கர்ராஜா(36), மணிகண்டன்(32) ஆகியோர் என்பதும், இவர்கள் தான் துப்பாக்கியை கோவையில் இருந்து வாங்கி வந்து பூமிநாதனிடம் விற்றுத்தரும்படிகூறி கொடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்தனர். இதையடுத்து வள்ளி உள்பட 4 பேரையும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் வள்ளி பரமக்குடியில் உள்ள பெண்கள் சிறையிலும், மற்ற 3 பேரும் ராமநாதபுரம் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.


செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

No comments :

Post a Comment