(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, September 12, 2019

பச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை!!

No comments :
ராமேசுவரத்தில் பாம்பன் குந்துகால் மற்றும் சிங்கிலி தீவு முதல் குருசடை தீவு வரையிலான கடல் பகுதி மிகவும் முக்கியமானது. ஆனால் அங்கு நேற்று வழக்கமான நிறத்தில் இருந்து கடல்நீரானது நிறம் மாறி, பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. காலையில் லேசான பச்சை நிறத்தில் இருந்த கடல்நீர், பகல் நேரத்தில் கரும் பச்சையாக மாறியதுடன், பாசி படர்ந்த நீர் போன்றும் தோற்றம் அளித்தது.

கிளி, ஒரா, காரல், விலாங்கு உள்ளிட்ட பல வகை மீன்களும் இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தன. இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள், மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து அந்த ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குழுவினர், பாம்பன் குந்துகாலுக்கு சென்று பச்சை நிறமாக மாறியிருந்த கடல் நீரை சோதனையிட்டனர். பின்னர் ஆராயச்சிக்காக அந்த நீரை பெரிய டப்பாக்களில் சேகரித்ததுடன், இறந்து கிடந்த மீன்களையும் எடுத்து சென்றனர். பச்சை நிறத்தில் காட்சியளித்த கடல்நீரை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

கடல்நீர் பச்சை நிறமாக மாறியதற்கான காரணம் குறித்து மண்டபம் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறியதாவது:-


பாம்பன் குந்துகால் முதல் குருசடை தீவு பகுதியில் கடல் நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. அதற்கான காரணத்தை ஆராய, கடல் நீரையும், இறந்து கிடந்த மீன்களையும் எடுத்து வந்துள்ளோம். ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்கடல் பகுதியில் குறிப்பிட்ட சில நாட்கள் கடலில் உள்ள ‘நாட்டிலூகா‘ என்ற அறிவியல் பெயர் கொண்ட கண்ணுக்கு தெரியாத பாசி, தனது மகரந்த சேர்க்கைக்காக கடலில் படரும். அந்த சமயத்தில்தான் கடல்நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். கடல் நீரோட்டம் வேகமாக இருக்கும்போது, கடல்நீர் பச்சை நிறமாக மாறுவது தெரியாது. ஆனால் தற்போது கடல் நீரோட்டம் குறைவாக இருப்பதால்தான் பாம்பன் கடல்தண்ணீர் பச்சை நிறத்தில் தெளிவாக தெரிகிறது.

அந்த வகை பாசியானது கடல்நீரின் மேற்பரப்பில் படர்ந்து காணப்படுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி, இறக்கின்றன. இந்த மாற்றமானது, ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் அவ்வப்போது நடப்பது வழக்கம் தான். சில நாட்களில் கடல் நீர் மீண்டும் இயற்கையான நிறத்தை அடையும். கடல் நீர் பச்சையாக இருப்பது 3 நாட்களுக்கு மேல் இருந்தால் கடலில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கடலானது அதிகமாக பச்சை நிறமாக மாறியுள்ளது. பாம்பனில் கடல்நீர் பச்சை நிறமாக மாறியுள்ளதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இதனால் மீனவர்கள் பயப்பட தேவையில்லை. இறந்து கரை ஒதுங்கிய மீன்களில் ஒரா வகையை சேர்ந்த மீன்கள் தான் அதிகம். இதுபற்றியும் தீவிரமாக ஆய்வு செய்தால்தான் காரணத்தை அறிய முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

பாம்பன் கடல் பகுதியை போல, மண்டபம் தெற்கு துறைமுகத்தை ஒட்டிய பகுதியிலும் கடல்நீர் லேசான பச்சை நிறத்தில் காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. 

செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

No comments :

Post a Comment