முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, January 10, 2019

ராமநாதபுரம் குடிநீரில் தொட்டியில் மிதந்த பிணம், போலீஸ் விசாரனை!!

No comments :

ராமநாதபுரம் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் சுதாகர்(வயது 55). இவர் அதே தெருவில் புத்தகக்கடை நடத்தி வந்தார். சமீபத்தில் அவருடைய தாயார் இறந்து விட்டார். இதனால் சரிவர கடைக்கு செல்லாமல், சோகத்துடன் காணப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென அவர் மாயமானார். பின்னர் 2 நாட்கள் கழித்து வீடு திரும்பிய அவர் மீண்டும் மாயமானார். அதன் பின்னர் அவர் என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. அவருடைய குடும்பத்தினர் சுதாகரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டியை பார்வையிட, நகராட்சி பணியாளர்கள் சென்றிருந்தனர். அந்த தொட்டி 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். அந்த தொட்டி முழுவதும் குடிநீர் ஏற்றப்பட்டு இருந்தது.

குடிநீர் தொட்டிக்குள் பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அழுகிய நிலையில் ஒருவரது உடல் தொட்டியில் மிதந்து கொண்டிருந்தது. இதுதொடர்பாக பஜார் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் அந்த தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகத்தை நிறுத்தினர்.


போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன், சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். குடிநீர் தொட்டியில் இருந்து உடல் மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. விசாரணையில் அவர் மாயமான சுதாகர் என்பதும், தாயார் இறந்த துக்கத்தில் அவர் குடிநீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த குடிநீர் தொட்டியில் இருந்துதான், ராமநாதபுரம் நகரின் பெரும்பாலான பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த தொட்டியில் அழுகிய நிலையில் பிணம் மீட்கப்பட்டதையடுத்து, ராமநாதபுரம் நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தாங்கள் பிடித்து வைத்திருந்த குடிநீரை அப்புறப்படுத்தினர்.

ராமநாதபுரம் நகரசபை ஆணையாளர் வீரமுத்துகுமார், பொறியாளர் குமரகுரு, சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் பணியாளர்களுடன் சென்று மேல்நிலை தொட்டியில் இருந்த 10 லட்சம் லிட்டர் குடிநீரையும் கழிவுநீர் கால்வாயில் திறந்து விட்டு வெளியேற்றினர். பின்னர் பணியாளர்கள் தொட்டிக்குள் இறங்கி மருந்துகளை தெளித்து சுத்தம் செய்தனர்.

கடும் குடிநீர் பஞ்சம் நிலவக்கூடிய இந்த நேரத்தில் நகராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டியை பாதுகாப்பின்றி ஊழியர்கள் திறந்து வைத்திருந்ததும், அதில் ஒருவர் விழுந்து தற்கொலை செய்துகொண்டது கூட தெரியாமல் 4 நாட்கள் கழித்து, அழுகிய நிலையில் பிணம் மிதந்த பின்பே கண்டுபிடிக்கப்பட்டதும் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 3 நாட்களாக அந்த தொட்டியில் இருந்து வினியோகித்த தண்ணீரை குடித்த மக்கள் பீதியில் உள்ளனர். எனவே இனியாவது குடிநீர் தொட்டிகளை பாதுகாப்பான முறையில் மூடிவைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)