முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, January 29, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 1,480 ஆசிரியர்கள் கைது!!

No comments :
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு மறியல் செய்து கைதாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் திரளாக சேர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் திரளாக கலந்துகொண்டனர். 


ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அனைவரும் சாலைமறியல் செய்ய முயன்றதால் போலீசார் வழிமறித்து 886 பெண்கள் உள்பட 1,480 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி, உச்சிப்புளி, தேவிபட்டிணம், திருப்புல்லாணி, சத்திரக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள 17 திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

அரசு சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 36 துறைகளை சேர்ந்த 5 ஆயிரத்து 615 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதால் இந்த பணிக்காக ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் நேற்றும் திரளாக வந்து மனு கொடுத்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் கூறியதாவது:-

மாவட்டத்தில் பள்ளிகள் மூடப்படாமல் திறந்து செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 200 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர்கள் யாரும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிபணியிடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக இதுவரை 4 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ள நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட சரிபார்ப்பில் 1,254 பேர் தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசின் வழிகாட்டுதலின்படி தற்காலிக பணி நியமன உத்தரவு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)