முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 9, 2019

புதிய தொழில் முனைவோர் ரூ.30 லட்சம் வரை அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!

No comments :
படித்த, முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற பட்டம், பட்டயப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நீட்ஸ் திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் ஆரம்பிக்க குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிக பட்சம் ரூ.5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு வங்கிக்கடன் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினராய் இருப்பின் 35 வயதிற்கு மிகாமலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு பிரிவினராக இருப்பின் 45 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும.

வருமான வரம்பு ஏதுமில்லை.

விண்ணப்பதாரர் 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொடர்ந்து வசிப்பவராகவும், முதல் தலைமுறை தொழில்முனைவோராகவும் இருக்க வேண்டும்.


தொழில் முனைவோர் பொது பிரிவினராக இருந்தால் திட்ட மதிப்பீட்டில் சொந்த முதலீடு 10 சதவீதமாகவும், சிறப்பு பிரிவினராக இருந்தால் 5 சதவீதமாகவும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம் மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். பங்குதாரர் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

நீட்ஸ் திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொழில்முனைவோர்க்கான பட்டியலில் மேலும் புதிய 16 தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


எனவே தொழில் ஆரம்பிக்க விரும்பும் முதல் தலைமுறை தொழில் முனைவோர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ, அல்லது 04567-230497 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று https://www.msmeonline.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

அப்துல் கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - அரசு அறிவிப்புக்கு மாவட்ட மக்கள் வரவேற்பு!!

No comments :
ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதியில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. ஆனால் இந்த பகுதியில் அரசு கல்லூரி எதுவும் இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ–மாணவிகள் தினமும் சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரத்துக்கு சென்று அங்குள்ள கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இதையடுத்து மாணவ–மாணவிகளின் நலன் கருதி ராமேசுவரத்தில் அரசு சார்பில் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று நேற்று நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தில் ராமேசுவரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.



இதுகுறித்து கலாமின் அண்ணன் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயர், பேரன் சேக் சலீம் ஆகியோர் கூறும்போது, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது தமிழக அரசு அப்துல்கலாம் மீது வைத்துள்ள மரியாதையை காட்டுகிறது என்று தெரிவித்தனர்.

மேலும் அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதற்காக தமிழக முதல்–அமைச்சர், மற்றும் துணை முதல்–அமைச்சர் ஆகியோருக்கு தீவு பகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)