முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 10, 2019

ராமநாதபுரம் நகராட்சியில் புதிதாக 145 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சியில் புதிதாக 145 சுகாதாரப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அலுவலர் சி.ஸ்டான்லி குமார் கூறினார்.

ராமநாதபுரம் நகராட்சியில் புதிதாக சுகாதார அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்ட அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தற்போது நிரந்தமான சுகாதாரப் பணியாளர்களாக 94 பேர் உள்ளனர். நகராட்சி விதிமுறைப்படி 342 சுகாதாரப் பணியாளர்கள் இருக்கவேண்டும். அதனடிப்படையில் 197 பேர் தேவைப்படுகின்றனர். தற்போது புதிதாக 145 சுகாதாரப் பணியாளர்களை ஒப்பந்த ஊதிய அடிப்படையில் நியமிக்க நகராட்சி இயக்குநரகம் அனுமதித்துள்ளது.



ஆகவே வரும் மார்ச்சுக்குள் புதிய சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதற்காக ஒப்பந்தம் கோரும் பணிகள் நடந்துவருகின்றன. புதிதாக சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதும், நகராட்சியில் 250 வீடுகளுக்கு 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்படும். அக்குழுவினர் சுகாதாரப் பிரச்னைகளை வீடு வீடாகச் சென்று பார்த்து சீர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் நகரில் சுகாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் ஆணையர் ஆலோசனைப்படி எடுக்கப்படும். குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கவும், அனைத்துப் பகுதிகளிலும் புதிதாக மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தினமும் இரு வேளைகள் 7 வாகனங்கள் மூலம் 28 டன் குப்பைகள் அகற்றப்பட்டுவருகின்றன என்றார்.

இருநாள் பயிற்சி: ராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் வரும் 12, 13 (செவ்வாய், புதன்) ஆகிய தேதிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்த சிறப்புப் பயிற்சி நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சியில் பரமக்குடி, கீழக்கரை, ராமேசுவரம் நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை கையாளுதல், அவற்றை தரம் பிரித்து உரமாக மாற்றுதல் குறித்த பயிற்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)