முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 14, 2019

ராமநாதபுரத்தில் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச மாதிரி நேர்காணல்!!

No comments :
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச மாதிரி நேர்காணல் தேர்வு ராமநாதபுரத்தில் வரும் 16 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. 

இது குறித்து சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனர் து.சுகேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

தமிழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் 113 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படவுள்ளது. 

இதனை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள சுரேஷ் ஐ.எஸ்.எஸ். அகாதெமி சார்பில் வரும் சனிக்கிழமை (பிப்.16) காலை 9 மணிக்கு இலவசமாக மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது.இத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அனைத்துப் பகுதி போட்டியாளர்களும் கலந்துகொள்ளலாம். 

தேர்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அகாதெமி சார்பில் இலவசமாக பாடக்குறிப்புகள், நடப்பு நிகழ்வுகள், விரிவான விளக்கங்களுடன் விடைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். 

மாதிரித் தேர்வில் பங்கேற்போர் முன்பதிவு செய்வது அவசியம். அரசு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வரவேண்டும். மாதிரித் தேர்வுக்கு வருவோருக்கு அகாதெமி சார்பில் இலவசமாக விடுதி வசதிகளும் செய்துதரப்படும். 

மேலும் விவரங்களுக்கு 7550352916 மற்றும் 7550352917 என்ற செல்லிடப் பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பாதாளச் சாக்கடை குடிநீர் இணைப்புக்கு தவணை முறையில் கட்டணம் செலுத்தும் திட்டம்!!

No comments :
பாதாளச் சாக்கடை குடிநீர் இணைப்புக்கு தவணை முறையில் 5 ஆண்டுகளில் கட்டணம் செலுத்தும் புதிய திட்டம் ராமநாதபுரம் நகராட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நகராட்சி பொறியாளர் பி.குமரகுரு புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

ராமநாதபுரம் நகரில் வரி செலுத்தும் கட்டடங்கள் 23,918 உள்ளன. இதில் சுமார் 11 ஆயிரம் கட்டடங்கள் பாதாளச் சாக்கடை இணைப்புப் பெறும் வகையில் உள்ளன. அதன்படி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 10,258 பாதாளச் சாக்கடை இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் புதிதாக 500 பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்துவிட்டால், கிட்டத்தட்ட அனைத்து கட்டடங்களிலும் பாதாள சாக்கடை இணைப்பு பெற்றதாகிவிடும். 


இந்த நிலையில், தமிழக அரசின் புதிய திட்டமாக பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்கு தவணைமுறையில் கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடைத் திட்ட இணைப்பைப் பெறுவோர் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்களுக்கு நகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர் மூலம் சாக்கடை இணைப்பு தரப்பட்டுவிடும். அதன்பின்னர் இணைப்புப் பெற்றவர்கள் சொத்துவரியிலோ அல்லது 5 ஆண்டுகளில் 10 தவணை | முறையிலோ கட்டணத்தை செலுத்தலாம். பாதாள சாக்கடை இணைப்புக்கு அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் செலவாகும். அதை முதலிலே செலுத்த வேண்டிய தேவையில்லை, குடிநீர் குழாய் இணைப்புக்கும் முதலில் இணைப்பு கொடுக்கப்பட்டுவிடும். பின்னர் தவணை முறையில் அதற்கான கட்டணத்தை செலுத்தலாம், இத்திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்தவேண்டும். 

நகரில் தற்போது 147 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. அதில் தூர்ந்துபோன 20 கிணறுகளை ரூ.3 லட்சத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே உள்ள வட்டக்கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கும் வசதிக்காக ரூ.7 லட்சம் செலவிடப்படவுள்ளது. அதன்படி புதிய வட்டக்கிணறானது சிதம்பரம் பிள்ளை ஊருணியில் அமைக்கப்படுகிறது. 

நகராட்சி விதிமுறைப்படி தினமும் நபர் ஒருவருக்கு 135 லிட்டர் தண்ணீர் தரப்படவேண்டும். ஆனால், தற்போது 61 லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது. கோடை கால குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க தொட்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ரூ.2 ஆயிரம் உதவித்தொகை - பட்டியலை சரிபார்க்க ஏராளமானோர் குவிந்தனர்!!

No comments :
தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையைப் பெறும் பயனாளிகள் பட்டியலை சரிபார்ப்பதற்காக கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை ஏராளமானோர் குவிந்தனர்.


வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாக தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்தார். 

இதனையடுத்து, அத்தொகையைப் பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளின் பட்டியலில் தங்கள் பெயர்கள் உள்ளனவா என சரிபார்ப்பதற்காக கமுதி, சிங்கபுலியாபட்டி, வெள்ளையாபுரம், கண்ணார்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். 


பட்டியலை சரிபார்த்த பின்னர் அதில் பெயர்கள் இருந்தால் அவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மனு அளித்தனர். 

இதுகுறித்து பேரூராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பெற்று, பரிசீலனை செய்து. வறுமை கோட்டிற்குகீழ் வாழும் மக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்றார். 

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)