முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 17, 2019

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பேட்டரி கார் சேவை!!

No comments :
ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அன்வர்ராஜா எம்.பி. ரூ.8 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் பேட்டரி கார் வழங்கியுள்ளார். இதன் சேவை தொடக்க விழா மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் முல்லைக்கொடி வரவேற்று பேசினார். விழாவில் கலந்து கொண்ட அன்வர்ராஜா எம்.பி. நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்தார். அதனை கலெக்டர் இயக்கினார். விழாவில் அன்வர்ராஜா எம்.பி. பேசியதாவது:–

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முழுவதும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.80 லட்சம் செலவில் அலங்காரகற்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நோயாளிகள் பயணம் செய்வதற்காக பேட்டரி கார் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அடுத்தபடியாக தினமும் 2 ஆயிரம் வெளிநோயாளிகள், மாதத்திற்கு 15 ஆயிரம் உள்நோயாளிகள் மற்றும் 500 அறுவை சிகிச்சைகள் நடைபெறக்கூடிய மிகப்பெரிய மருத்துவமனையாக ராமநாதபுரம் உள்ளது.


இதேபோல ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே டி–பிளாக்கில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் எம்.பி. நிதியில் இருந்து அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

பூங்கா முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமையாக மாற்ற மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன். பாம்பன்–சின்னப்பாலம், கீழநாகாச்சி–தேவர் நகர், என்மனங்கொண்டான்–தர்காவலசை, ஆர்.எஸ்.மங்கலம்–சேத்திடல், நயினார்கோவில்–எஸ்.சிறுவயல், முதுகுளத்தூர்–கீழத்தூவல், கமுதி–சின்ன ஆணையூர், காரியாபட்டி–அல்லாலபேரி கிராமம் ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் மற்றும் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 544 பள்ளிகளுக்கு ரூ.37½ லட்சம் செலவில் நூலகங்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. 63 அரசு பள்ளிகளுக்கு ரூ.கோடி செலவில் இருக்கைகள், மேஜைகள் வழங்கப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் 129 இடங்களில் ரூ.6கோடியே 68 லட்சம் செலவில் எல்.இ.டி. உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. 70 ஊராட்சிகளில் ரூ.5 கோடியே 16 லட்சம் செலவில் சாலை பணிகள் நடைபெற்றுள்ளன. 25 ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 19 லட்சம் செலவில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 49 ஊராட்சிகளில் ரூ.2.57 கோடி செலவில் கலையரங்கம் கட்டி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலையை நீட்டிப்பதற்காக ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் அரிச்சல்முனை வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக பாம்பன் கடலில் புதிய ரோடு பாலம் கட்டப்படும். காவிரி பிரச்சினைக்காக அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தையே ஒரு மாதம் முடக்கியதன் காரணமாக மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.

தமிழகத்தின் உரிமைக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததால் பல்வேறு திட்டங்கள் நமக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜவகர்லால், நகர் செயலாளர் அங்குச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமநாதபுரம் அசோக்குமார், திருப்புல்லாணி முனியாண்டி, மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர் கயிலை செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் சாதிக் அலி நன்றி கூறினார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)