முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 27, 2019

கஞ்சா கடத்திக் கொண்டு வந்ததாக இளைஞர் கைது!!

No comments :
ஆந்திரத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்திக் கொண்டு வந்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை எழும்பூருக்கு சர்கார் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை வந்தது. இந்த ரயிலில் வந்திறங்கிய பயணிகளை மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர்.


அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு பெரிய பையுடன் வந்த இளைஞரை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி பகுதியைச் சேர்ந்த செ.பிரசன்னா (24) என்பதும், அவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சாவை கடத்திக் கொண்டு வருவதும் தெரியவந்தது. | இதையடுத்து போலீஸார், பிரசன்னாவை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் விசாரணையில், பிரசன்னா அந்த கஞ்சாவை ராஜமுந்திரியில் ரூ.40 ஆயிரத்துக்கு வாங்கியிருப்பதும், ராமநாதபுரத்தில் அதை ரூ.3 லட்சத்துக்கு விற்க திட்டமிட்டு ரயிலில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.


இது தொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் நகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்கு பேட்டரி வாகனங்கள்!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்கு ரூ.50.40 லட்சம் செலவில் பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளிலும் தினமும் சுமார் 28 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவை பட்டினம்காத்தான் பகுதியில் திறந்த வெளியில் குவிக்கப்பட்டு வருகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தின்படி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த இடத்திலேயே உரமாக்கி மறுசுழற்சிக்கு உள்ளாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 4 இடங்களில் குப்பைகளை நுண்ணிய உரமாக்கும் மையங்கள் தலா ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுவருகின்றன, நகரில் குப்பைகளை சேகரிக்கும் வகையில் தலா ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 16 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தனித் தனியாகச் சேகரிக்க 4 வாளிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தை ஆண்களும், பெண்களும் எளிதில் இயக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.


இதைத் தவிர சிறிய ரக குப்பை சேகரிக்கும் 4 லாரிகளும் வாங்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் ரூ.5.40 லட்சம் மதிப்புடையவை. குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்க வாகனங்கள் வாங்கிய நிலையில், அதை பயன்படுத்தி குப்பைகளை உரமாக்கும் மையம் செயல்பட பல மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

ஆனால் குப்பைகளைத் தரம் பிரித்து வாகனங்கள் மூலம் சேகரிக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளதாக நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

 மேலும், நகராட்சியில் தற்போது 94 சுகாதாரப் பணியாளர்கள் நிரந்தரப் பணியில் உள்ளனர். இவர்களில் ஒப்பந்தப்பணி அடிப்படையில் 83 பேர் பணிபுரிகின்றனர். தூய்மை இந்தியா திட்டத்தின்படி 155 பேர் விரைவில் பணியில் சேர்க்கப்படவுள்ளனர். அதன்படி நகராட்சியில் மொத்தம் 342 பேர் சுகாதார பணியில் சில மாதங்களில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)