முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 30, 2019

கீழக்கரையில் போலீஸ் வேலைக்கான பயிற்சி!!

No comments :
கீழக்கரையில் போலீஸ் வேலைக்கான பயிற்சி!!



தகவல் பகிர்வு: கீழக்கரை டைம்ஸ்



(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

"சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம்" ராமநாதபுரம் பொதுகூட்டத்தில் திரு.ஸ்டாலின் முழக்கம்!!

No comments :
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் சம்பத் குமார் ஆகியோரை ஆதரித்து ராமநாதபுரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் முன்னிலை வகித்தார்.




கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க.வின் பாசிச, சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு வேட்பாளர் நவாஸ் கனியை வெற்றி பெறச் செய்திட வேண்டும். 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தமிழகத்தில் உள்ள கையாலாகாத அரசு அப்புறப்படுத்தப்படும். அதற்கு பரமக்குடி சட்டமன்ற வேட்பாளர் சம்பத்குமாரை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.



கலைஞர் கருணாநிதி இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இது. அவரது மகனான ஸ்டாலின் கேட்கிறேன். வெற்றியை தாருங்கள். மத்திய, மாநில அரசுகளை மாற்றிட அனைவரும் துணை நிற்க வேண்டுகிறேன். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய இந்த தேர்தலில் அனைவரும் சிந்தித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

பிரதமர் மோடியும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டணி அமைத்துள்ளனர். இவர்கள் தங்களது ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி பிரசாரம் செய்யாமல் ஏதோ மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் தி.மு.க.வும் ஆட்சி நடத்துவது போல எங்களை விமர்சித்து பேசுகின்றனர். நாங்கள் உரிமையோடு மக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறோம்.



ராமநாதபுரம் மாவட்டத்தின் தண்ணீர் பஞ்சத்தை அடியோடு போக்க ரூ.617 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தினை நிறைவேற்றினோம். கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து நானே தொடங்கி வைத்தேன். ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தை போக்கியது தி.மு.க. தான். இதனால் தண்ணீரில்லா காடு ராமநாதபுரம் என்ற அவப்பெயர் மறைந்தது.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அவர்களுக்கு வாக்களித்தால் பொற்கால ஆட்சியை தருவோம் என்கின்றனர். அப்படி என்றால் தற்போது பொல்லாத, கொலைகார ஆட்சி என்பதை ஒப்புக்கொள்கின்றார்களா? அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்துக்கு பொள்ளாச்சியும், கோடநாடு சம்பவங்களே சாட்சி. ஊழல் குற்றச்சாட்டால் பதவி விலகியவர் ஜெயலலிதா. அதுவே தமிழ்நாட்டிற்கு அவமானம். அதை காட்டிலும் மோசமாக கோடநாடு விவகாரம் அமைந்துள்ளது. இது பற்றி பேசக் கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதை சந்திக்க தயாராக உள்ளேன். பிரதமர் தன்னை நாட்டிற்கு காவலாளி என்கிறார். ஆனால் கொலைகார எடப்பாடி பழனிச்சாமிக்கு காவலாளியாக உள்ளார்.


மீனவர்கள் கொடுமையில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை காக்க முடியாத மோடி எடப்பாடிக்கு காவலாளியாக உள்ளார். பலமுறை தமிழகம் வந்த மோடி பல உறுதிமொழிகளை அளித்தார். எதையும் நிறைவேற்றவில்லை. இனி ஒரு மீனவர் கூட கொல்லப்பட மாட்டார் என்றார். ஆனால் இன்றுவரை பலர் சிறையில் உள்ளனர். இலங்கை சென்ற போது கூட மீனவர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 2017–ல் இலங்கை அரசு மீனவர்களுக்கு எதிராக கொடுமையான சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. அதனை தட்டி கேட்க நாதியில்லை. இந்த நிலையில் மோடியின் நண்பரான சுப்பிரமணியசாமி மீனவர்களை அவமானப்படுத்தி பேசுகிறார். இப்படிப்பட்ட பா.ஜ.க.வை ராமநாதபுரத்தில் ஓட, ஓட விரட்ட வேண்டும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல தன்னை நினைத்துக் கொண்டு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டமில்லாத இடங்களில் பேசுகிறார். பூத கண்ணாடியால் கூட ஊழலை கண்டுபிடிக்க முடியாது என்கிறார். அவர்களது கூட்டணியில் உள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இவர்களின் ஊழலை பட்டியலிட்டு புத்தகமாவே வெளியிட்டுள்ளார். அதில் ரூ.70 லட்சம் கோடி ஊழல் நடந்ததாகவும், அதனால் முதல்–அமைச்சர், துணை முதல்– அமைச்சரிடம் ரூ.30 ஆயிரம் கோடி சொத்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக முதல்–அமைச்சர் பேசுகிறார். பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள், கோவை சிறுமி பாலியல் கொடுமை செய்து கொலை போன்ற சம்பவங்களால் சட்டம், ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை. சென்னையில் கொள்ளைக்காரர்கள் போலீஸ், சுங்கத்துறை அதிகாரிகள் போல உடையணிந்து கடத்தல், கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். சட்டம், ஒழுங்கு சீர் கெட்டு உள்ளதற்கு இதுவே உதாரணம்.

மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆனால் பா.ஜ.க. அரசு கார்பரேட் கடன்களை மட்டும் ரத்து செய்கிறது. மத்தியில் சர்வாதிகார போக்கு, மாநிலத்தில் உதவாக்கரை அரசு என்கிறோம். ஏனென்றால் கலைஞர் முதல்–அமைச்சராக இருந்த போது அனைவருக்கும் உதவும் கரமாக இருந்தார். விருதுநகரில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் கர்ப்பிணி பெண் பாதிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூரில் கெட்டுப்போன ரத்தம் செலுத்தியதால் 4 மாதத்தில் 15 பெண்கள் சாவு என பத்திரிகையில் செய்து வந்துள்ளது. இது அக்கிரமமான ஆட்சி.

இதற்கு பதில் சொல்லும் வகையில் வாக்களியுங்கள். பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ன ஆனது? இந்திய பொருளாதாரம் முன்னேறியதா, கருப்புப்பணம் ஒழிக்கப்பட்டதா, சுப்ரீம் கோர்ட்டு போன்ற தன்னாட்சி நிறுவனங்கள் சுதந்திரம் என்ன ஆனது? இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம். மீண்டும் மத்தியில் தி.மு.க. பங்களிப்புடன் மதச்சார்பற்ற ஆட்சியையும், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான நல்லாட்சியையும் அமைத்து அந்த வெற்றிகளை கலைஞரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரத்தில் பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு மு.க.ஸ்டாலின் பரமக்குடி நான்கு வழிச்சாலை வழியாக மதுரைக்கு செல்வதாக தகவல்கள் இருந்தன. ஆனால் மு.க.ஸ்டாலின் திடீரென பரமக்குடி அருகே அரியனேந்தல் நான்கு வழிச்சாலையில் இருந்து பரமக்குடிக்கு உள்ளே வரும் சாலையில் வாகனத்தை ஓட்டச் சொன்னார். பின்னர் பரமக்குடிக்குள் வந்த ஸ்டாலின் திடீரென கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வேனில் இருந்து இறங்கி சாலையில் நடந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் சாலையில் திரண்டு மு.க.ஸ்டாலினை பார்த்து ஆரவாரத்துடன் கை அசைத்தனர். பதிலுக்கு அவரும் சிரித்தபடி கை தூக்கியும், கும்பிட்டும், நடந்து சென்று வாக்குகள் சேகரித்துக் கொண்டு சுமார் 1 கி.மீ. தூரம் 20 நிமிடம் நடந்து வந்தார். பின்பு அங்கிருந்து மீண்டும் வேனில் ஏறி புறப்பட்டு சென்றார்.


செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)