முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, June 25, 2019

ராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு!!

No comments :
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் சுமார் 100 பேர் நிரந்தர ஊழியர்களாக உள்ளனர். இவர்களது சம்பளத்தில் தொழிலாளர் சேமநல நிதியாக ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு ஸ்டேட் வங்கியில் அதற்கான கணக்கில் செலுத்தப்படுவது வழக்கம்.

இவ்வாறு கோவில் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு ஒவ்வொரு மாதமும் ரூ.5 லட்சத்து 12 ஆயிரம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக குறைவான தொகை செலுத்தப்படுவதாகவும், அதற்கான விளக்கத்தை அளிக்குமாறும் கேட்டு வருங்கால வைப்பு நிதித்துறை அதிகாரிகள் கோவில் இணை ஆணையருக்கு தபால் அனுப்பி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இணை ஆணையர் கல்யாணி சம்பந்தப்பட்ட அலுவலரை அழைத்து விளக்கம் கேட்டபோது மாதந்தோறும் அந்த தொகையை செலுத்தியதற்கான ரசீது இணைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஸ்டேட் வங்கியில் விசாரித்தபோது, சுமார் 3½ ஆண்டுகளாக ரூ.5 லட்சத்து 12 ஆயிரம் செலுத்துவதற்கு பதிலாக ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மட்டுமே செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.



இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்த ரசீதுகளை சரிபார்த்த போது அது போலியானவை என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், கோவில் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய தற்காலிக ஊழியர் சிவன் அருள்குமார் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவரது தந்தை இக்கோவிலில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மொத்தம் ரூ.78 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இணை ஆணையர் கல்யாணி இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

அவர் இது குறித்து விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.


செய்தி: தினசரிகள்

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;