முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, July 11, 2019

ராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா!!

No comments :
ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஜப்பான் பன்னோக்கு கூட்டுறவு முகமை உதவியுடன் ஒருங்கிணைந்த கடல் உணவு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலீடு ஊக்குவிப்பு திட்டம் 2-ன் கீழ் அமைக்கப்பட்டு வரும் இந்த பூங்காவில் கடல் உணவு, மீன் பிடி தொழில் தொடர்பான மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ.22 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த கடல் உணவு பூங்கா முதல்கட்டமாக 50 ஏக்கரில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த 50 ஏக்கரில் 18 தொழில் மனை வளாகங்களை பிரித்து வழங்க தயாராக உள்ளது. இந்த மனை பகுதிகளில் தொழில்தொடங்க ஏதுவாக தொழிற்சாலைகளுக்கான தனி மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சாலை வசதி, தண்ணீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, வாய்க்கால் வசதி, தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கடல் உணவு பூங்காவில் தொழில் தொடங்க தற்போதைய நிலையில் 2 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. குறிப்பாக சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று படகு தயாரிக்கும் தொழில் தொடங்க கடை வளாகம் கேட்டுள்ளது.

இந்த கடல் உணவு பூங்காவில் ஒரு ஏக்கர் பரப்பளவிலான கடை வளாகம் ரூ.23 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மனை வளாகம் பெறப்பட்ட 24 மாதங்களுக்குள் தொழில் தொடங்க வேண்டும். இந்த வளாகத்தில் மீன் உணவு வகைகள் தயாரித்தல், மேம்படுத்தப்பட்ட பதப்படுத்தப்பட்ட உடனடி மீன் உணவு வகைகள் தயாரித்தல், மீன்பிடி வலைகள் தயாரிப்பு, படகு தயாரித்தல் போன்ற சிறு,குறு தொழில்கள் தொடங்கலாம்.

தற்போதைய நிலையில் 50 ஏக்கரில் 18 மனை வளாகங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்டமாக மீதம் உள்ள 50 ஏக்கரில் இந்த கடல் உணவு பூங்காவை விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது.

இதுதவிர இங்கு மீன்கள் பதப்படுத்த ஏதுவாக குளிர்சாதன கிடங்கு வசதியும், கடல் உணவு பூங்காவிற்காக தனி துணை மின்நிலையமும் அமைக்கப்பட உள்ளது.


செய்தி: தினசரிகள்


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;