முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, July 13, 2019

தொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்!!

No comments :


ராமநாதபுரம்:மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுரங்களில் மின் கம்பிகளை கட்டி இணைக்கும் இன்சுலேட்டர்கள் டிஸ்க் உடைந்ததால் நேற்று முன்தினம் முதல் ஏராளமான கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

சீராக மின்சாரத்தை கடத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சீரான மின்னழுத்தம் கிடைப்பதற்காக 'இன்சுலேட்டர் டிஸ்க்' பொருத்தப்படுகிறது.
இவற்றை ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியம் தொடர் பராமரிப்பு செய்யாததால் கடந்த ஜூலை 3ல் வழுதுார், ராமநாதபுரம், கூரியூர் பகுதிகளில் உடைந்தன.
இதனால், ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதியில் இரண்டு நாட்கள் மின்தடை ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மூன்று நாட்களுக்கு பின் ஜூலை 6ல் மின் விநியோகம் சீரானது.



மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தை இரண்டு நாட்கள் இருளில் மூழ்கடித்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 10) பகலில் வழுதுார் பகுதியில் திடீரென உயர்மின் கோபுரத்தில் ஏராளமான இன்சுலேட்டர் டிஸ்க் அமைப்புகள் உடைந்து சிதறின. இதனால், ராமேஸ்வரம், மண்டபம், கீழக்கரை பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அவற்றை மின்வாரிய பொறியாளர்கள் நேற்று முன்தினம் இரவு முழுதுவதும் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். வழுதூர் பகுதியில் பீங்கான் அமைப்புகள் உடைந்த நிலையில், காரைக்குடி செல்லும் மின்தடம், பெருங்குளம் கீழக்கரை செல்லும் மின்தடங்களிலும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்சுலேட்டர்கள் சேதமடைந்தன.

இதனால், ராமேஸ்வரம், கீழக்கரை நகராட்சி பகுதிகளும், மண்டபம், பெருங்குளம், காவனுார், வாலிநோக்கம், ஏர்வாடி உள்ளிட்ட பெரும்பாலான ஊரகப் பகுதிகளிலும், பல கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டது. சுமார் 75 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு மின்விநியோகம் செய்வது நேற்று தடைபட்டதாக மின்வாரியப் பொறியாளர்கள் தெரிவித்தனர். இன்சுலேட்டர்கள் பழுதுநீக்கும் பணியில் வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் நேற்று அதிகாலை முதலே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொறியாளர்கள் கூறினர்.


செய்தி: தினசரிகள்


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;