Monday, August 19, 2019
விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!!
பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான
வாழ்நாள் வரையிலான ஓய்வூதிய திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும் பயன்
பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளின் முதுமை
காலத்தை கருத்தில் கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுஉள்ளது.
இத்திட்டத்தில் பதிவு செய்யும் சிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு
வாழ்நாள் வரை ஓய்வூதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
18 முதல் 40 வயது வரையிலான சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களது வயதுக்கேற்ப ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை பொது இ-சேவை மையத்தில் 60-வது வயது வரை பணம் செலுத்த வேண்டும். அதற்கு நிகரான தொகையை மத்திய அரசும் சந்தாதாரர் கணக்கில் செலுத்தும்.
ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி என இருவரும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் தனித்தனியாக இணைந்து கொள்ளலாம். சந்தாதாரர் இத்திட்டத்தை தொடர விருப்பமில்லையெனில் அவர் செலுத்திய தொகை 5 ஆண்டுகளுக்கு பிறகு வங்கி வட்டி விகிதத்தில் வட்டியுடன் திரும்ப தரப்படும். திட்ட காலத்திற்கு பிறகு சந்தாதாரர் இறக்கும் பட்சத்தில் அவரது மனைவி அல்லது வாரிசுகளுக்கு மாதம் ரூ.1500 வீதம் அவர்களது இறுதிக்காலம் வரை கிடைக்கும்.
ஏற்கனவே பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் அதே வங்கி கணக்கு வாயிலாக ஓய்வூதிய திட்டத் தொகையினை செலுத்தலாம். எனவே இத்திட்டத்தில் இணைய விரும்பும் சிறு, குறு விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையுடன் அருகில் உள்ள பொது இ-சேவை மையத்தை உடனே அணுகி பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது!!
ராமநாதபுரத்தில் கடந்த சில
நாட்களாக ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை, ராமநாதபுரம் - கீழக்கரை நெடுஞ்சாலை
ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை மர்ம கும்பல்
வழிமறித்து பணம், செல்போன் போன்றவற்றை பறித்துக்கொள்வதுடன் வாகனங்களை சேதப்படுத்தி
கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இதனால் மக்கள் இந்த பகுதிகளில் செல்ல வாகன ஓட்டிகள்
அச்சமடைந்தனர்.
மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய இந்த வழிப்பறி சம்பவத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவத்தின்போது போலீசாருக்கு முக்கிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு துத்திவலசையை சேர்ந்த குருசரண் என்பவரிடம் மர்ம கும்பல் வழிப்பறி செய்தபோது அந்த கும்பலிடம் இருந்த செல்போனை குருசரண் தற்செயலாக பறித்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்று வரும் வழிப்பறி சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கேணிக்கரை இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசாமி, குகனேஸ்வரன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து வழிப்பறி கும்பலை பிடிக்க உத்தரவிட்டார்.
இதன்படி குருசரண் கொடுத்த செல்போன் தகவல்களின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மர்ம நபர்கள் கடந்த சில நாட்களாக சென்றுவந்த பகுதிகளில் அந்த வழியாக சென்றவர்களிடம் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதை போலீசார் உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து இந்த வழிப்பறி சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு மக்களை அச்சத்தில் உறைய செய்த பெருங்குளம் மேற்குத்தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் இளையராஜா (வயது 24), அழகன் குளம் செட்டிமடை செல்வம் மகன் ரஞ்சித்(20) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் குருசரண் மற்றும் சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்த சமையல் மாஸ்டர் அப்துல்சுக்கூர் உள்ளிட்ட 3 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டியும், அரிவாளால் தாக்கியும் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது இவர்கள் தான் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்களின்போது உடனிருந்த ஆற்றங்கரை காலனியை சேர்ந்த முனீஸ் என்பவரையும் போலீசார் தேடிவருகின்றனர். ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக வழிப்பறியில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த கும்பல் பிடிபட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
செய்தி:
தினசரிகள்
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;