முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 4, 2019

ராமநாதபுரம் நகராட்சியில் 13,460 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு இல்லை!!

No comments :
ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி பகுதிகளில் 13 ஆயிரத்து 460 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு இல்லை. அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

நகராட்சி 33 வார்டுகளில் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில் மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், நகராட்சி சார்பில் கொசுத்தடுப்பு, நகராட்சி பணியாளர்கள், துாய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் 40 பேர் கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு அமைப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. நகராட்சியில் 18,675 வீடுகள் உள்ளன. இதில் 5,215 வீடுகளில் மட்டும் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 13,460 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு இல்லை.


நகர் பகுதியில் 2,500 சதுர அடியில் 36 வணிக கட்டடங்கள் உள்ளன. இதில் 24 கட்டடங்களில் மட்டும் மழைநீர் சேகரிப்பு உள்ளது. அரசு சார்ந்த கட்டடங்கள் 144ல் 56 கட்டடங்களில் மட்டும் உள்ளது. பல கட்டடங்களில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அந்த கட்டடங்களையும் நகராட்சி சார்பில் கணக்கெடுத்து அவற்றை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்தாத வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.


செப்., 30க்குள் அந்தந்த வீடுகள், வணிக நிறுவனங்களில் மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்தவேண்டும். மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்தாத வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் குடிநீர், பாதாளசாக்கடை இணைப்புகளை துண்டித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;