முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, September 26, 2019

ராமேசுவரம் கோவிலில் ரூ. 80 லட்சம் கையாடல்!!

No comments :


ராமேசுவரம் கோவிலில் பணியாற்றி வந்த தற்காலிக கணினி ஆபரேட்டர் சிவன் அருள்குமரன் கோவிலின் வருங்கால வைப்பு நிதி தொகையில் இருந்து ரூ.80 லட்சம் கையாடல் செய்து விட்டதாக கோவிலின் இணை ஆணையர் கல்யாணி கடந்த 3 மாதத்திற்கு முன்பு ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.


அந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் ராமேசுவரம் கோவிலில் பலரிடம் விசாரணை செய்தனர். வருங்கால வைப்புநிதி பணத்தில் கையாடல் செய்ததில் சிவன் அருள்குமரனுக்கு உடந்தையாக இருந்ததாக கோவிலில் பணியாற்றிய ரவீந்திரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சிவன்அருள் குமரன் தலைமறைவாக உள்ளார்.

இதுபற்றி ராமேசுவரம் முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் முனியசாமி கூறியதாவது:-

ராமேசுவரம் கோவிலில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி தொகையில் இருந்து ரூ.80 லட்சம் பணத்தை தற்காலிக பணியாளர் சிவன்அருள் குமரன் கையாடல் செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.இது குறித்து இணை ஆணையர் புகார் கொடுத்து 3 மாதத்திற்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை.

எனவே இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திருக்கோவில் பணியாளர்களின் பணத்தை கையாடல் செய்து தலை மறைவாக உள்ள சிவன்அருள்குமரனை உடனடியாக கைது செய்யவும்,இதோடு தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் திருக்கோவில் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி பணத்தை மீட்டுதர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து விரைவில் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டையும் சந்தித்து திருக்கோவில் பணியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

விவசாயிகளுக்கு முதல்கட்டமாக ரூ.175 கோடி பயிர் இழப்பீடு ஒதுக்கீடு - கலெக்டர்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, விவசாய இணை இயக்குனர் சொர்ணலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பேசியதாவது:–

மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டிற்கான காப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும். மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டுவதில் பெரும் முறைகேடு நடந்து வருகிறது. அவற்றை முறையாக கட்டுவதில்லை.

பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை. விவசாய நிலங்களில் காட்டுமாடுகள் நுழைந்து பயிர்களை அழித்து வருகின்றன. இதுதவிர வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை கட்டிவைக்காமல் அவிழ்த்து விடுவதால் விவசாய பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற மாடுகளை பிடித்து அபராதம் வசூலிக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வரத்துக்கால்களில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் தண்ணீர் வரமுடியாத நிலை உள்ளது. காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் வீரராகவ ராவ் பேசியதாவது:–

இந்த மாதம் சராசரி மழை அளவைவிட அதிகமாக பெய்துள்ளது. இதனால் அக்டோபர் மாதம் தொடங்கி வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பயிர்காப்பீடு விடுபட்டவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018–19–ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்தவர்களில் 171 கிராமங்களுக்கு முதல்கட்டமாக ரூ.175 கோடி இழப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு ஓரிரு வாரத்தில் வந்துவிடும். இந்த முறையும் காப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கடன் உள்ளிட்டவைகளுக்கு இதில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படமாட்டாது.

வங்கியில் வரவு வைக்காமல் ரொக்கமாகவோ, காசோலையாகவோ காப்பீடு தொகை வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வைகை அணையில் இருந்து விவசாயிகளின் தேவைக்கு ஏற்றபடி அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படும். காட்டுமாடுகளை பிடித்து காடுகளில்விட நடவடிக்கை எடுக்கப்படும். மாடுகளை அந்தந்த பகுதிகளில் பிடித்து அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தாலுகா வாரியாக இடம் தேர்வு செய்து மாவட்ட வருவாய் அதிகாரி அறிக்கை அளிக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் அகற்றி மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வெளிப்படை தன்மையாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாதந்தோறும் 2 பட்டா சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;