(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, May 14, 2020

தூய்மையாக காட்சிதரும் அக்னி தீர்த்த கடற்கரை, உரடங்கால் சுத்தமான ஆச்சரியம்!!

No comments :
புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் நீராடி விட்டு அதன் பின்னர் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு அக்னிதீர்த்த கடலில் நீராடும் பக்தர்கள் தங்களது தோஷங்கள் நிவர்த்தியாக ஈர துணிகளை கடலில் வீசிச்செல்வது தொடர்கிறது.

இதையடுத்து கடலில் யாரும் துணிகளை வீசக்கூடாது, கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில்தான் துணிகளை போட வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் பெரும்பாலான பக்தர்கள் தொட்டிகளில் போடாமல் கடலில் வீசினர். இவ்வாறு பக்தர்கள் வீசிய துணிகள் கடல் மணலில் புதைந்தும், பாறையில் சிக்கியும் அதிகஅளவில் கிடந்தன.

இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் கடந்த 1½ மாதத்திற்கு மேலாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அக்னிதீர்த்த கடற்கரை பகுதி முழுவதும் தூய்மை பணியாளர்களால் தினம் தினம் சுத்தம் செய்யப்பட்டு தற்போது தூய்மையான, அழகான கடற்கரையாக காட்சி தருகிறது. மேலும் கடலுக்குள் வீசிய துணிகளும் அகற்றப்பட்டுள்ளன.



இதுபற்றி நகராட்சி ஆணையாளர் கூறியதாவது:-

ஊரடங்கினால் கிடைத்த பயனாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கடலில் கிடந்த துணிகள் அனைத்தும் அகற்றப்பட்டு அந்த பகுதி முழுவதும் தூய்மையாக காட்சியளித்து வருகிறது.

ஊரடங்கு முடிந்து வழக்கம்போல் பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் நீராட வந்தாலும் தயவு செய்து கடலில் யாரும் துணிகளை வீச வேண்டாம். கடல் மற்றும் கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க பக்தர்களும், பொது மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.



செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment