முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 12, 2020

கீழக்கரை நகராட்சிக்கு ரூ.5000 அபராதம்; காரணம் தகவல் அறியும் உரிமை சட்டம்!!

No comments :
கீழக்கரை நகராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஆவண கோப்புகளை மனுதாரர் நேரில் சென்று ஆய்வு செய்து தகவல்களை பெற விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் மனுதாரருக்கு மூன்று அண்டுகளுக்கும் மேலாக தகவல் தராமல் அலைக்கழிப்பு செய்த கீழக்கரை நகராட்சி அலுவலகத்துக்கு மாநில தகவல் ஆணையம் ரூ.5000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.


இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முஹம்மது சாலிஹ் ஹுசைன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கீழக்கரை நகராட்சியில் குடிநீர் இணைப்புகள், தெரு விளக்குகள், சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு, பொது கழிப்பிடங்கள், பிறப்பு இறப்பு பதிவுகள், உரக்கிடங்கு, இப்பந்த பணிகள், டெண்டர் விபரங்கள், குப்பை தொட்டிகள், சாக்கடை வாறுகால் பராமரிப்பு, உப்பந்த பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் வருகைப் பதிவேடுகள், அலுவலர்களின் சம்பள விபரங்கள், அலுவலக கணக்குகள், வரி வருமானங்கள் நகராட்சி சொத்துக்கள், மத்திய மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட நிதிகள் சம்பந்தமான அனைத்து அசல் ஆவணங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்து தகவல்களை பெற மனு செய்திருந்தார்.


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செய்யப்படும் மனுவுக்கு 30 நாள்களுக்குள் பதில் தரப்பட வேண்டும். அனால் உரிய பதில் கிடைக்காததால் மனுதாரர் மேல்முறையீடு செய்திருந்தார். அதன் பின்னரும் நகராட்சி அதிகாரிகளிடமிருந்து பதில் வராததால் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்தார். மாநில அணையத்தின் வழக்கு விசாரணையிலும் நகராட்சி அதிகாரிகள் சரியான பதில் எதுவும் அளிக்காததால், மனுதாரர் கீழக்கரை நகராட்சியில் அவணங்களை ஆய்வு செய்து தகவல்களை பெற்றுக் கொள்ள ஆணையம் அனுமதியளித்து உத்தரவிட்டது.

அனால் ஆய்வின் போது, நகராட்சி அதிகாரிகள் முழுமையான தகவல்களை மனுதாரருக்கு வழங்காததால், மாநில தகவல் ஆணையத்தில் மனுதாரர் புகார் மனு தாக்கல் செய்தார்.


இந்நிலையில் மீண்டும் விசாரணை செய்த தகவல் ஆணையம், மனுதாரர் கோரிக்கையை ஏற்று, மனுதாரர் ஆவணங்களை ஆய்வு செய்து தகவல்களை பெற அனுமதி வழங்கியதோடு, இதுவரை முழுமையான தகவல் வழங்கப்படாததால், மனுதாரருக்கு தகவல் பெறும் உரிமை சட்டம், 2005 பிரிவு 19(8) பின் கீழ் இழப்பீடாக நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.5000/- வழங்க வேண்டும் என மேல் முறையீட்டு அலுவலரான நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.