முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 6, 2020

கீழக்கரை மூதாட்டிக்கு கரோனா பாதிப்பு, ராமநாதபுர மாவட்ட எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது!!

No comments :

கீழக்கரை மூதாட்டிக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர்களில், 11 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். மீதமுள்ள 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


இந்தநிலையில், கீழக்கரை புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு கபம், சுவாசப் பிரச்னை இருந்துள்ளது. அவர், ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு சிகிச்சைக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு கரோனா அறிகுறி இருந்ததை அடுத்து, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கபம் பரிசோதிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை வந்த பரிசோதனையின் முடிவில், மூதாட்டிக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, மூதாட்டி வசித்து வந்த கீழக்கரை புதுகிழக்குத் தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், சிறப்பு சுகாதாரக் குழுவினர் அத்தெருவில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

அனுமதி பெற்று வந்தாலும் வெளிமாவட்டத்தில் இருந்து வருவோரை தனிமைப்படுத்த வேண்டும் - கலெக்டர் உத்தரவு

No comments :

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 
பரமக்குடி அருகேயுள்ள பார்த்திபனூர்-மரிச்சுக்கட்டி சோதனைச்சாவடியில் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் மருத்துவக்குழுவினரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதனிடையே மாவட்டத்தில் இதுவரை 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 11 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

இந்த நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்று வாகனங்களில் வருபவர்கள் பார்த்திபனூர் சோதனைச்சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களை வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து அனுமதி பெற்று வாகனங்களில் வரும் பலரும் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். 


மேலும் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, வாணி வழியாக ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்துள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் அனுமதி பெறாமல் வருபவர்களை போலீசார் மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். 


எனவே வெளிமாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருபவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அனுமதியுடன் முறையாக வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு வருபவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.