Sunday, November 1, 2020
பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்!!
ராமநாதபுரம்
மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவாலயம் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் 30-ந் தேதி முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா நடைபெறும்.
இதில் கலந்து கொள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மதுரை வந்து
தங்கினார்.
நேற்று
காலையில் காரில் மதுரையில் இருந்து புறப்பட்டு 9.20 மணிக்கு பசும்பொன் வந்தார். அவருடன்
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார்,
டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், பாஸ்கரன், ஓ.எஸ்.மணியன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர்
உடன் வந்தனர்.
பின்னர்
அனைவரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை
செலுத்தினார்கள்.
இதை
தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பசும்பொன்
முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்தி விழாவும், 58-வது குருபூஜை விழாவும் சிறப்பாக
நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர்
1908-ம் ஆண்டு பிறந்தார். அவர் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்தார். இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து
இளைஞர்களை திரட்டி, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாக செம்மல் ஆவார்.
1920-ம்
ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில்
நடைமுறையில் இருந்த குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக தேவர் மேற்கொண்ட போராட்டம்
அப்போது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது.
1937-ம்
ஆண்டு மாநில தேர்தலில் ராமநாதபுரத்தில் இருந்து தேவர் போட்டியிட்டார். ஆங்கில அரசால்
வேட்பாளராக நிறுத்தப்பட்ட பலம் வாய்ந்த ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிர்த்து மகத்தான
வெற்றி பெற்றவர். அதை தொடர்ந்து 1946-ம் ஆண்டு சென்னை மாகாணம் தேர்தலிலும் முதுகுளத்தூர்
தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1948-ம் பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின்
தலைவரானார். 1937 முதல் 1962-வரை நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு அத்தனை
தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றவர்.
தேசியத்தையும்,
ஆன்மிகத்தையும் அடிப்படையாக கொண்டு அவர் ஆற்றிய சொற்பொழிவு அவருக்கு தெய்வதிருமகனார்
என்ற பெயரை பெற்று தந்தது. தேவர் பிறந்ததும், மறைந்ததும் அக்டோபர் 30-ந் தேதி என்பது
குறிப்பிட்டத்தக்கது. அவர் வாழ்ந்த நாட்கள் 20 ஆயிரத்து 75 நாட்கள், சிறையில் இருந்தது
4 ஆயிரம் நாட்கள். தேவர் பிறந்தநாளான அக்டோபர் 30-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்
என்று 1979-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்றைய தினத்தில்
இருந்து ஆண்டு தோறும் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக
அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு அரசு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
1994-ம்
ஆண்டு சென்னை நந்தனத்தில் தேவருக்கு முழுதிருவுருவ வெண்கல சிலையை ஜெயலலிதா அமைத்து
திறந்து வைத்தார். மேலும் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தை சீரமைத்து
தற்போது நினைவகம் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. அ.தி.மு.க. சார்பில் தேவரின் சிலைக்கு
தங்க கவசம் அணிவிக்கப்படும் என்று 2010-ம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி
2014-ம் ஆண்டு ஜெயலலிதா பசும்பொன் கிராமத்திற்கு நேரில் வந்து 13 கிலோ எடை கொண்ட தங்க
கவசத்தை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தேவருக்கு
அரசு விழா மற்றும் சென்னையில் முழு உருவ வெண்கல சிலை, பசும்பொன்னில் தேவருக்கு தங்க
கவசம் என அவருக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் பணிகளை அ.தி.மு.க. தொடர்ந்து மேற்கொண்டு
வருகிறது.
மேலும்
அ.தி.மு.க. அரசால் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கு, பால்குடம், முளைப்பாரி
மண்டபம், முடி காணிக்கை செலுத்தும் கட்டிடம், குடிநீர்வசதி, பேவர்பிளாக் சாலை வசதி,
பொதுக்கழிப்பிட வசதி என பல்வேறு பணிகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தேவருக்கு அனைத்து
சிறப்புகளையும் செய்தது அ.தி.மு.க. அரசுதான் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு
எடப்பாடி பழனிசாமி கூறினார்.
செய்தி:
தினத்தந்தி