(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 14, 2021

ராமநாதபுரத்தில் 35 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி!!

No comments :
ராமநாதபுரத்தில் 35 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

 

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய புத்தக நிறுவனம், பள்ளிக் கல்வித்துறை, நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மற்றும் பத்திரிகையாளர்கள் இணைந்து இப்புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றனர். ராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 10 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ.ம.காமாட்சிகணேசன் புத்தகக் கண்காட்சியைத் தொடக்கிவைத்தார். பின்னர் அவர் பேசியது:

 

தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த அப்துல்கலாமின் வழியில் மாணவர்கள் பயணிக்க, அவர் எழுதிய புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவரது புத்தகங்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும் விளக்குகளாக உள்ளன என்றார்.முதல் விற்பனை நூல்களைப் பெற்றுக்கொண்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் பேசியது: தேசத்துக்கு சேவை செய்ததன் மூலம் தனக்கான அடையாளத்தை அப்துல்கலாம் விட்டுச்சென்றுள்ளார். ஆகவே மாணவர்கள் பிறப்பால் ஏற்பட்ட அடையாளத்தை விட சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்டு புதிய அடையாளத்தை ஏற்படுத்தவேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறவேண்டும். சாதாரண வேலைக்குச் சென்றால் கூட குற்ற வழக்குகள் உள்ளனவா என சரிபார்க்கும் நிலை உள்ளது. ஆகவே மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் நட்பு கொள்ளக்கூடாது என்றார்.

 

கண்காட்சியில் முதல் நூல் விற்பனையைத் தொடக்கிவைத்து கூடுதல் ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் பேசியது:

 

புத்தகங்கள் நல்ல நண்பர்களாக இருப்பதை படித்தால் உணரலாம். அப்துல்கலாமின் புத்தகங்களை பள்ளி மாணவர்கள் படித்து அதைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றார். ராமநாதபுரம் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் சு.கணேசபாண்டியன், வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற செயலர் ந.சேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

தலைமை ஆசிரியர் பா.ஞானலெட் சா.சொர்ணகுமாரி வரவேற்றார். நியூ செஞ்சுரி புத்தக நிலைய மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

 

புத்தகக் கண்காட்சியானது வரும் 23 ஆம் தேதி வரை தினமும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். 

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment