(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 18, 2021

போலி குளிர்பானங்கள்; பலியாகும் பிஞ்சுகள்…குறட்டை விடும் உணவு பாதுகாப்பு துறை!!

No comments : 

தமிழகமெங்கும் பெட்டிக்கடைகள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் கடைகளை இலக்காக கொண்டு விற்கப்படும் போலி குளிர்பானங்களால் அப்பாவி பிஞ்சு குழந்தைகள் உடல்நல பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஒரு சில இடங்களில் தரமற்ற குளிர்பானங்களை அருந்துவதால் நிலைமை உயிரிழப்பு வரை செல்கிறது.

 

பிரபல குளிர்பான நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை தழுவி அதே போல் போலியாக அச்சிடப்பட்ட பாட்டில்களிலும், பாக்கெட்களிலும் தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் அதிகம் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன. குடிசைத் தொழில் போல் ஆங்காங்கு இதனை தயாரித்து பெட்டிக்கடைகளிலும், பஸ் ஸ்டாண்ட் கடைகளிலும் விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது. விவரம் அறியாத கிராமப்புற பெற்றோர் தங்கள் பிள்ளை கேட்கிறதே என ஆசையாய் அந்த தரமற்ற குளிர்பானங்களை வாங்கிக் கொடுப்பதால் வினை உருவாகிறது. பிரபல பிராண்டுகளின் குளிர்பானங்களை காட்டிலும் இது போன்ற டுபாக்கூர் குளிர்பான விற்பனையில் லாபம் அதிகம் கிடைப்பதால், வியாபாரிகள் சத்தமின்றி வாங்கி வைத்து விற்கத் தொடங்கியுள்ளனர். போலி குளிர்பானங்களில் சேர்க்கப்படும் முறையற்ற வேதிப்பொருட்களால் வாந்தி, பேதியில் தொடங்கி உயிரிழப்புகள் வரை நீள்வது குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இதற்கு காரணம்.

 


அண்மையில் கூட சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மலிவு விலை குளிர்பானம் அருந்திய 2 சிறுவர்கள் வாந்தி மற்றும் பேதியால் பாதிக்கப்பட்டனர். மேலும், சென்னை பெசண்ட் நகரில் டொகிடோ என்ற 10 ரூபாய் குளிர்பான அருந்திய சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பேருந்து நிலைய கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி அருந்திய 6 வயது சிறுவன் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளான். இது கண்ணுக்கு தெரிந்த செய்தி, இதேபோல் கண்களுக்கு எட்டாத பல பாதிப்புகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.

 

இவற்றையெல்லாம் புயல் வேகத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளோ, ஒரு சம்பவம் நடந்தால் அடுத்த 2 நாட்களுக்கு அதிரடி காட்டுவதும் பிறகு பெட்டி பாம்பாய் அடங்கிக் கிடப்பதுமாக உள்ளனர்.

 

இனி வரும் நாட்களிலாவது ஆய்வு செய்து போலி குளிர்பான நிறுவனங்களை கண்டறிந்து அவற்றின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அப்பாவி பிஞ்சு குழந்தைகளின் நலனை காக்க முடியும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.

 

செய்தி: ஒன் இண்டியா

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment