முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 14, 2021

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலைவாய்ப்பின்றிகாமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200,

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300,

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400,

பட்டதாரிகளுக்கு (பொறியியல் போன்ற தொழிற்கல்வி தவிர) மாதம் ரூ.600

என 3ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 


உதவித்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆகவே, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பித்திருக்கவேண்டும்.

 

ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினருக்கு 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

 

மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 (எழுபத்திரண்டாயிரத்திற்கு) மிகாமல் இருக்கவேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலுவோருக்கு உதவித் தொகை வழங்கப்படாது. தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.

 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சிக்கு ரூ.750,

பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

 

அரசின் வேறு திட்டத்தில் உதவித்தொகை பெறாதவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

 

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரத்தில் 35 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி!!

No comments :
ராமநாதபுரத்தில் 35 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

 

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய புத்தக நிறுவனம், பள்ளிக் கல்வித்துறை, நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மற்றும் பத்திரிகையாளர்கள் இணைந்து இப்புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றனர். ராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 10 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ.ம.காமாட்சிகணேசன் புத்தகக் கண்காட்சியைத் தொடக்கிவைத்தார். பின்னர் அவர் பேசியது:

 

தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த அப்துல்கலாமின் வழியில் மாணவர்கள் பயணிக்க, அவர் எழுதிய புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவரது புத்தகங்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும் விளக்குகளாக உள்ளன என்றார்.முதல் விற்பனை நூல்களைப் பெற்றுக்கொண்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் பேசியது: தேசத்துக்கு சேவை செய்ததன் மூலம் தனக்கான அடையாளத்தை அப்துல்கலாம் விட்டுச்சென்றுள்ளார். ஆகவே மாணவர்கள் பிறப்பால் ஏற்பட்ட அடையாளத்தை விட சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்டு புதிய அடையாளத்தை ஏற்படுத்தவேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறவேண்டும். சாதாரண வேலைக்குச் சென்றால் கூட குற்ற வழக்குகள் உள்ளனவா என சரிபார்க்கும் நிலை உள்ளது. ஆகவே மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் நட்பு கொள்ளக்கூடாது என்றார்.

 

கண்காட்சியில் முதல் நூல் விற்பனையைத் தொடக்கிவைத்து கூடுதல் ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் பேசியது:

 

புத்தகங்கள் நல்ல நண்பர்களாக இருப்பதை படித்தால் உணரலாம். அப்துல்கலாமின் புத்தகங்களை பள்ளி மாணவர்கள் படித்து அதைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றார். ராமநாதபுரம் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் சு.கணேசபாண்டியன், வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற செயலர் ந.சேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

தலைமை ஆசிரியர் பா.ஞானலெட் சா.சொர்ணகுமாரி வரவேற்றார். நியூ செஞ்சுரி புத்தக நிலைய மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

 

புத்தகக் கண்காட்சியானது வரும் 23 ஆம் தேதி வரை தினமும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். 

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.