முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 23, 2021

திறப்பு விழாவுக்கு தயாராகும் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி!!

No comments :

ராமநாதபுரத்தில் புதிய மருத்துவ கல்லூரி திறப்பு விழா வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான கட்டமைப்பு பணிகள் இரவு-பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

 

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தின்கீழ் தமிழகத்தில் மத்தியஅரசின் நிதிஉதவியுடன் ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகபட்டினம், திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. 

 

இதன்படி தமிழகத்தில் தற்போதைய நிலையில் ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 11 மருத்துவ கல்லூரிகள் பணிகள் முடிவடைந்து தயார்நிலையில் உள்ளதோடு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

 

குறிப்பாக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் 100 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் அனைத்தும் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன. இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள 11 புதிய மருத்துவ கல்லூரிகளை வருகிற 12-ந் தேதி விருதுநகரில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என்றும் இந்த விழாவில் முதல்- அமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

 

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகளை டீன் டாக்டர் அல்லி, கண்காணிப்பாளர் டாக்டர் மலர்வண்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திறப்பு விழாவிற்கு ஏற்ப ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் தயார்நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

 


இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

 

முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஏற்ற வகையில் 6 மாடிகளில் வகுப் பறை கட்டிடங்கள், சமையலறை, தங்கும் விடுதி, அலுவலக கட்டிடம், நூலகம் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ஏறத்தாழ 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன.

 

இதுதவிர, ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தேவையான துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தவிர்க்க முடியாத விபத்து தலைக்காய சிகிச்சை தவிர அனைத்து சிகிச்சைகளும் ராமநாதபுரத்திலேயே மேற்கொள்ள தயாராக உள்ளோம். 100 மாணவர் சேர்க்கை பணியிடங்களில் 15 சதவீதம் மத்திய அரசு ஒதுக்கீடும், 85 சதவீதம் மாநிலஅரசு ஒதுக்கீடும் பின்பற்றப்படும். 

 

தற்போதைய நிலையில் 5 அறுவை சிகிச்சை அரங்குகள் தயார்நிலையில் உள்ளன. புதிய பல்நோக்கு கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி அறுவை சிகிச்சை அரங்குகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் செயல்முறை கல்விக்கு ஏற்ற வகையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 4 மனித உடல்கள் தயார்நிலையில் மதுரையில் உள்ளன. கல்லூரி தொடங்கியதும் அந்த உடல்கள் கொண்டுவரப்பட்டு பயிற்சிக்கு பயன்படுத்தப்படும்.

 

மாணவர்கள் செயல்முறை கல்வி நிலைக்கு செல்லும்போது இங்கு அனைத்து வசதிகளும் கட்டமைப்புகளும் உருவாகி விடும். இதுதவிர, ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் கூடுதலாக 11 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் உள்ள நிலையில் கூடுதலாக ஒரு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு கூறினர்.

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.