முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, September 29, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் முழுமையாக பஸ்களை இயக்குவது எப்போது?!!

No comments :

 ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 சதவீதத்திற்கும் குறைவான அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் மக்கள்நெரிசலில் அவதிப்படுகின்றனர்.

 

 

முழுமையாக பஸ்களை இயக்குவது எப்போது, என்ற கேள்வி எழுந்துள்ளது.கொரோனா ஊரடங்கு விதிமுறை முழுமையாக தளர்த்தப்படவில்லை. பொதுமக்களின் நலன் கருதி அரசு பஸ்கள் செப்.,1 முதல் இயக்கப்படுகின் றன. ஆனால் இன்னும் ஏராளமான கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து துவங்கவில்லை. நகர் பகுதிகளிலும் 70 சதவீதத்திற்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன.

 

 

மக்கள் பஸ்சுக்காக காத்துஇருக்கும் நிலை உள்ளது. அலுவலக வேலை நேரங்களிலும் குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் பல ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் நெரிசலில் மக்கள் பயணிக்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முன்பு 120 டவுன் பஸ்கள் உட்பட 323 அரசு பஸ்கள்பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டன.

 


 

மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து மாவட்டத்திற்குள் 100 பஸ்கள் வரை இயக்கப்பட்டன. இதன்படி 423 பஸ்கள் இயக்கப்பட்டதில் தற்போது 296க்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன.ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் நலங்கிள்ளியிடம் கேட்ட போது, கொரோனா பரவலை தடுக்க அரசு உத்தரவின்பேரில் தற்போது 70 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

 

 

அக்.1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டால் 80 சதவீதம் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கிராமங்களில் மக்கள் டூவீலர் பயணத்திற்கு மாறியுள்ளனர். பஸ்களை இயக்க கோரிக்கை விடுத்தால் இயக்குகிறோம்.பொதுவாக இரவு 7:00 மணிக்கு மேல் மக்கள் வெளியூர் செல்வதை தற்போது விரும்புவதில்லை. இதனால் இரவு நேர பஸ் இயக்கம் குறைக்கப்பட்டுஉள்ளது. இயல்பு நிலை வரும் வரை இந்த நிலை தொடரும், என்றார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, September 28, 2020

ராமநாதபுரம் கல்வி அலுவலக அதிகாரி உள்பட 5 பேர் கைது; போலி நியமன சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த வழக்கு!!

No comments :

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் குரூப்-4 தேர்வு மூலம் நிரப்பப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நிரப்புவதற்கு கலந்தாய்வு நடத்தப்பட்டதில் 37 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் உள்ள 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 2 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு சிவகங்கையை சேர்ந்த பெண் ஒருவர் மட்டுமே தேர்வாகி பணியில் சேர்ந்துள்ளார். மீதம் உள்ள ஒரு பணியிடம் அந்த பள்ளியில் காலியாக இருந்தது.இந்த சூழ்நிலையில் ராமநாதபுரம் சூரங்கோட்டை வலம்புரி நகரை சேர்ந்த தர்மராஜ் மகன் ராஜேஷ் (வயது 32) மேற்கண்ட பணிக்கு தான் தேர்வாகி உள்ளதாக கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கையெழுத்துடன் கூடிய பணி நியமன ஆணையை கொண்டு வந்து சிக்கல் அரசு மேல்நிலை பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். அந்த பணிநியமன ஆணை சான்றிதழின் மேல் தலைமை ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்து பார்த்தபோது அது போலியான உத்தரவு என்பது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் கிடம் புகார் செய்தார்.

திடுக்கிடும் தகவல்கள்

அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு பலரிடம் ரூ.5 லட்சம் வீதம் பணம் வாங்கி கொண்டு போலி நியமன ஆணை வழங்கி உள்ளது தெரிய வந்தது. முதன்மை கல்வி அலுவலக இருக்கை பணி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராமநாதபுரம் பெரியார் நகரில் வசித்து வரும் குருந்தலிங்கம் மகன் கண்ணன் (47) என்பவர் இந்த மோசடிக்கு மூளையாக இருந்து செயல்பட்டது தெரிய வந்தது.


இவர் முதன்மை கல்வி அலுவலர் மூலம் வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை கலர் ஜெராக்ஸ் எடுத்து அதில் பெயரை மாற்றி வேலைக்காக காத்திருந்தவர்களிடம் தலா ரூ.5 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார். இந்த மோசடிக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யூனியன் அலுவலக உதவியாளர் எஸ்.காவனூரை சேர்ந்த முத்து மகன் கேசவன் (45) உடந்தையாக இருந்து அவரும் 2 பேரை வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார்.

இவர்கள் மூலம் மேற்கண்ட ராஜேஷ் மற்றும் பரமக்குடி அண்ணாநகரை சேர்ந்த கலைவானன் (26), பரமக்குடி பாரதிநகர் சாத்தையா மகன் சதீஷ்குமார் (33), மண்டபத்தை சேர்ந்த ராமநாதபுரம் பாரதிநகரில் வசித்து வரும் மனோஜ் ஆகியோர் தலா ரூ.5 லட்சம் கொடுத்து பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். பெரிய அளவில் நடந்துள்ள இந்த மோசடியை தொடர்ந்து போலீசார் முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன், பரமக்குடி யூனியன் அலுவலக உதவியாளர் கேசவன், ராஜேஷ், சதீஷ்குமார், கலைவாணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மனோஜை போலீசார் தேடிவருகின்றனர்.

ஒப்புகை சான்று

இந்த மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது மேற்படி கண்காணிப்பாளர் கண்ணன் எதுவுமே தெரியாததுபோன்று விசாரணைக்கு ஒத்துழைத்து உரிய ஆவணங்களை வழங்கி நல்லவர் போல நடித்துள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. இதன்பின்னர் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தபோது கண்ணன் வசமாக சிக்கி கொண்டுள்ளார்.

பரபரப்பு

பணியில் சேர்ந்த அனைவரின் பட்டியலையும் பரிசோதித்தபோதுதான் மேற்கண்ட 4 பேரும் மோசடியாக சேர்ந்துள்ளது தெரியவந்தது. போலி பணி நியமன சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததால் சம்பளம் போடுவது, பணியாளர் பதிவேடு தயார் செய்தல், வருகை பதிவேடு உள்ளிட்டவற்றில் சிக்கி கொள்வோம் என்ற அடிப்படை தகவல் அறிந்தும் முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் துணிச்சலுடன் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதுதான் கல்வித்துறை அலுவலர்கள் மட்டுமல்லாது அனைத்து அரசு அலுவலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடு நடந்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது இளநிலை உதவியாளர் பணிநியமனத்திலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, September 24, 2020

கீழக்கரையை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு பெற்றார்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு பெற்றார்.

 

கீழக்கரை பழைய கொத்துபா பள்ளி தெருவை சேர்ந்த M.நாதியா ஹனிபா தனது சட்ட படிப்பை முடித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று கானொளி மூலம் தன்னை   வழக்கறிஞராக பதிவு செய்தார்.

 


இவர் தாஸிம் பீவி மகளிர் கல்லூரியில் B.Sc.,(IT) யும், முகம்மது சதக் கல்லூரியில் MBA யும், கர்நாடக சட்ட  பல்கலைக்கழகத்தில் LLB யும் படித்துள்ளார்.

 

சகோதரிக்கு நம் முகவை முரசு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

 

செய்தி; நஸ்ருதீன், கீழை


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, September 20, 2020

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று; கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை!!

No comments :

தமிழகத்தில் சில மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், குறிப்பாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

  


இந்த நிலையில் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியில் நேற்று காலை முதலே பலத்த காற்று வீசியது. இதுபோல் தனுஷ்கோடி பகுதியிலும் பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகிறது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே பலத்த காற்று காரணமாக பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி இருந்த ஒரு மீன்பிடி விசைப்படகின் நங்கூர கயிறு அறுந்து கரையோரம் உள்ள கடல் பகுதியில் தரைதட்டிய நிலையில் நின்றது. அந்த படகை மீட்டு ஆழமான கடல் பகுதிக்கு கொண்டு சென்ற மீனவர்கள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, September 8, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!!

No comments :

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் கலெக்டர் வீரராகவராவ் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு 2020-ம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி பாராட்டினார்.

 

தொடர்ந்து விழாவில் கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:-

 

மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களிடமே அதிக நேரம் செலவிடுகின்றனர். குழந்தைகளின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது.

 


ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதானது ஒவ்வொரு ஆசியர்களின் கனவு விருதாகும். நடப்பாண்டில் இவ்விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

விழாவில், நவாஸ்கனி எம்.பி., மணிகண்டன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித் தலைவர் திசைவீரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மண்டபம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் திருமதி கல்பனாத்ராய், மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துச்சாமி, கருணாநிதி, முருகம்மாள் உள்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, September 1, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் சுமார் 120 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் சுமார் 120 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ராமநாதபுரத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. கடந்த மே மாதம் மீண்டும் உள்ளூர் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, அதையடுத்து வெளிமாவட்ட போக்குவரத்தும் மண்டல அளவில் தொடங்கியது. இதன் பின்னர் கரோனா தீநுண்மித் தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது.

 


தற்போது உள்ளூர் போக்குவரத்துக்கு அரசு மீண்டும் அனுமதியளித்துள்ளது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 120 அரசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. முகக்கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே பேருந்தில் செல்ல அனுமதிக்கப்படுவர் என போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர்கள் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பயணிகள் பேருந்துக்குள் ஏறுவதற்கு முன்னர் நடத்துனர் தரும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். நடத்துநர்கள் தெர்மாமீட்டர் மூலம் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும். பயணிகள் பேருந்துக்குள் அனுமதிக்கப்படும் முன்பு கிருமிநாசினி தெளித்து பேருந்தை சுத்தப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பேருந்து நிலையங்கள், நிறுத்தங்களை தூய்மைப்படுத்தும் பணியும் திங்கள்கிழமை தொடங்கியது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.