முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 27, 2020

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.2.10 கோடி மதிப்பில் புதிதாக 70 வெண்டிலேட்டர்கள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.2.10 கோடி மதிப்பில் 70 செயற்கை சுவாச சாதனங்கள் (வெண்டிலேட்டர்கள்) புதிதாக வாங்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் எம். அல்லி புதன்கிழமை தெரிவித்தார்.

 

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, கடந்த ஏப்ரல் மாதம் வரை 18 செயற்கை சுவாச சாதனங்களே இருந்தன. தீவிர சிகிச்சைப் பிரிவு, ரத்த சுத்திகரிப்புப் பிரிவு, பிரசவ சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகளில் மட்டுமே இந்த சாதனங்கள் இருந்தன. அதன்பிறகு கரோனா தொற்று பரவலால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கூடுதல் செயற்கை சுவாச சாதனங்கள் அமைக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 


இதுகுறித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் எம். அல்லி புதன்கிழமை கூறியது:

 

மருத்துவமனைக்கு தற்போது புதிதாக 70 செயற்கை சுவாச சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில், 15 சிறப்பு சாதனங்களாகும். இந்த செயற்கை சுவாச சாதனங்கள் மூலம் கரோனா நோயாளிகளுக்கான சுவாச வாயுவை விரைந்து வழங்கி, சிகிச்சை அளிக்கலாம். சாதாரணமான நோயாளிகளுக்கு மணிக்கு 5 லிட்டர் முதல் 5 லிட்டர் வரையில் (ஆக்ஸிஜன்) சுவாசக் காற்று தேவைப்படும். கரோனா தீவிரமாக பாதித்தவர்களுக்கு மணிக்கு 15 லிட்டர் முதல் 20 லிட்டர் வரையில் சுவாசக் காற்று தேவைப்படும். இத்தகைய தீவிர கரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சாதனங்கள் மூலமே சுவாசம் அளிக்க முடியும் என்பதால், அத்தகைய சிறப்பு வசதி மிக்க சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கை சுவாச கருவிகள் ஒவ்வொன்றும் தலா ரூ.3 லட்சம் மதிப்புடையவை. அரசு மருத்துவமனையில் தினமும் 500- க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,580 பேருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு நாளை 28 ஆம் தேதி முதல் மாணவ சேர்க்கை!!

No comments :

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

 

இதுகுறித்து கல்லூரி சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை வரும் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

 


அதன்படி, வரும் 29 ஆம் தேதி கணிதம், இயற்பியல் பாடங்களுக்கும், 31 ஆம் தேதி வேதியியல், தாவரவியல் பாடங்களுக்கும், செப்டம்பர் 1 ஆம் தேதி விலங்கியல், கடல்வாழ் உயிரியல் பாடங்களுக்கும், 2 ஆம் தேதி பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும், 3 ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


செப்டம்பர் 4 ஆம் தேதி அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் காலியிடங்களுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் அருகே திருவிழா தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக 19 பேர் மீது வழக்கு!!

No comments :

ராமநாதபுரம் அருகே கிராமத்தில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக 19 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.

 

ராமநாதபுரம் அருகே பேராவூரில் முனியய்யா கோயில் உள்ளது. இக்கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஏற்கெனவே இருதரப்பினரிடையே மோதல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 


இதில் ரவிசந்திரன் (48), பிரகதி (26) ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து இருதரப்பிலும் அளித்தப் புகாரின் பேரில் ஒரு தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீதும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த 9 பேர் மீதும் கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.