முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 30, 2018

கீழக்கரையில் வரும் மே-3ம் தேதி இலவச சிறுநீரக மருத்துவ முகாம்!!

No comments :
கீழக்கரையில் வரும் மே-3ம் தேதி இலவச சிறுநீரக மருத்துவ முகாம்!!தகவல்: திரு. ஜெய்னுலாப்தீன், கீழக்கரை


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

தண்ணீர் எடுக்க வந்த வாகனங்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!!

No comments :

மண்டபம் யூனியன் அழகன்குளம் கிராமத்தில் நிலத்தடி நீர் நல்ல தண்ணீராக இருப்பதால் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் ஆழ்குழாய்கள் அமைத்து சுற்று வட்டார பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததை தொடர்ந்து தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இங்கிருந்து லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் எடுத்துச்செல்ல தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அழகன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் எடுக்க கிராம மக்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தடை உத்தரவு பெற்றுள்ளனர். இருப்பினும் தனியார் சிலர் தங்களது இடங்களில் கிணறுகள் அமைத்து தண்ணீரை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு தினமும் நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் எடுத்துச்செல்லப்படுகிறது.

இதையடுத்து இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை இந்து-முஸ்லிம் ஐக்கிய சபை நிர்வாகிகள் நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். அதன் பின்னரும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதால் இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதனை தொடர்ந்து அழகன்குளத்தில் நிலத்தடி நீரை எடுக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை மீறி தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அழகன்குளம் பகுதியில் தண்ணீர் எடுக்க வந்த டிராக்டர் மற்றும் லாரிகளை அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் தடுத்து நிறுத்தி ஐகோர்ட்டு உத்தரவை காண்பித்து இனிமேல் இந்த பகுதியில் தண்ணீர் எடுக்க வரவேண்டாம் என்று கூறி திருப்பி அனுப்பினர். இவ்வாறு ஏராளமான வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, April 28, 2018

தடை உத்தரவை மீறி நிலத்தடி நீரை உறிஞ்சும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு ஹைகோர்ட் உத்தரவு!!

No comments :
மண்டபம் யூனியன் அழகன்குளம் கிராமத்தில் நிலத்தடி நீர் நல்ல தண்ணீராக இருப்பதால் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் ஆழ்குழாய்கள் அமைத்து சுற்று வட்டார பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததை தொடர்ந்து தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இங்கிருந்து லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் எடுத்துச்செல்ல தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அழகன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து நிலத்தடி நீரை எடுக்க கிராம மக்கள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தடை உத்தரவு பெற்றுள்ளனர். இருப்பினும் தனியார் சிலர் தங்களது இடங்களில் கிணறுகள் அமைத்து தண்ணீரை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு தினமும் நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் எடுத்துச்செல்லப்படுகிறது.

இதையடுத்து இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை இந்து,முஸ்லிம் ஐக்கிய சபை நிர்வாகிகள் நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். அதன் பின்னரும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதால் இதுகுறித்து இந்து சமூக செயலாளர் முத்துரெத்தினம், ஜமாத் தலைவர் அகமது ஆகியோர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அதனை தொடர்ந்து அழகன்குளத்தில் நிலத்தடி நீரை எடுக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை மீறி தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதேபோல வட்டார வளர்ச்சி அலுவலர், நிலத்தடி நீரை எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, April 22, 2018

ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு கோடைகால டிப்ஸ்; உணவு பாதுகாப்பு குறித்த புகார் தெரிவுக்க வாட்ஸ்அப் நம்பர் - கலெக்டர்

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடைகால கொடிடுமையை சமாளிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், பழச்சாறுகள் பருகும்போது கவனிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து கலெக்டர் அறிவுரை  வழங்கி உள்ளார். 

கோடைகாலத்தில் பொதுமக்கள் கடைகளில் பழச்சாறு, கரும்புச்சாறு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகும்போது கவனிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்படி சம்பந்தப்பட்ட கடை உணவு பாதுகாப்பு துறையின் உரிமம்,  பதிவுச்சான்றிதழ் உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். கடை இருக்கும் பகுதி சுகாதாரமாகவும்,  விற்பனையாளரும், பழச்சாறு தயாரிப்பவரும், தன்சுத்தம், கைசுத்தம் பேணுகிறாரா என்பதை கவனித்திட வேண்டும். அதேபோல குளிர்பானம் பழச்சாறு செய்யப் பயன்படும்  பழம், பால், தண்ணீர், போன்ற மூலப்பொருட்களும், குளிர்பானத்திற்கு பயன்படுத்தும் ஐஸ்கட்டிகள் மற்றும் சர்க்கரை ஆகியவை தரமானதாக உள்ளதா என உறுதி செய்திட வேண்டும். கூழ், மோர், பால், தண்ணீர் போன்றவை துருப்பிடிக்காத சுத்தமான பாத்திரங்களில் வைத்திருக்கப்பட வேண்டும். 
அதேவேளையில் தூசிபடாதவாறும், , பூச்சிகள் மொய்க்காதவாறும் மூடி வைத்திருக்கும் பழங்கள், பழச்சாறு, பழத்துண்டுகள், ப்ரூட் சாலட்களை மட்டுமே வாங்க வேண்டும். பழங்கள், சூரிய ஒளி, வெப்பம்படும் வகையில் இருந்தால் தரமும் சுவையும் மாறுபட்டு சீக்கிரம் அழுககூடியவை, ஆதலால் பழங்களை சூரிய ஒளி, வெப்பம்படாதவாறு குளிர்பெட்டி அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.

பேக்செய்யப்பட்ட தண்ணீர், பழச்சாறு, குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்கும் போது  காலாவதி தேதி, மற்றும் தயாரிப்பாளரின் முகவரி ஆகியவற்றை சரிபார்த்து வாங்கவும்.

பழச்சாறு, புருட் சாலட் செய்ய பயன்படுத்தும் பழங்கள் அழுகும் நிலையில் இருந்தால் அவைகளை தவிர்க்கவும். சர்பத் குளிர்பானங்களில் நீலம், ஊதா ஆகிய அங்கிகரிக்கப்படாத நிறங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் வாங்குவதை தவிர்க்கவேண்டும். அதிகமான நிறங்கள் இரசாயன சுவைகூட்டி கலந்த சர்பத் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். ஐஸ்கட்டிகளை வைக்கோல், சணல் பை போன்றவை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடிவைத்திருத்தல் கூடாது. குளிர்பானங்கள் பழச்சாறுகள் நேரடியாக குளிர்பெட்டியில் இருந்து பெறுவது நல்லது.

இயன்ற அளவு ஐஸ்கட்டிகள் போட்டு தரும் குளிர்பானங்களையும், பழச்சாறுகளையும் தவிர்ப்பது நல்லது.  குளிர்பானங்கள், பழச்சாறு நறுக்கிய பழங்கள் போன்றவற்றை உணவு தரமற்ற மற்றும் மறுசுழற்சி செய்யப்ட்ட பிளாஸ்டிக் கப்புகளிலும் கவர்களிலும் வாங்குவதை தவிர்க்கவேண்டும்.

மேலும் மாவட்டத்தில் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு குறித்த புகார்களை தெரிவிக்க ஏதுவாக 9444042322 என்ற வாட்ஸ்அப் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் உணவுப்பாதுகாப்பு குறித்து புகார்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக புகார்கள் தெரிவிக்கலாம்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, April 19, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 21 ஆம் தேதி வட்டார வாரியாக சுழற்சி முறையில் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைகள் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம்,புகைப்படம் பதிவேற்றம் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்ய குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.அதன்படி, மாவட்டத்தில் ராமநாதபுரம் வட்டத்தில் கழுகூரணி நகர், ராமேசுவரம் அங்கன்வாடி மையம், திருவாடானை வட்டத்தில் வரவணி, பரமக்குடி வட்டத்தில் வெங்கட்டன் குறிச்சி, முதுகுளத்தூர் நகர், கடலாடி வட்டத்தில் கொத்தங்குளம், கீழக்கரை வட்டத்தில் முடிமன்னார் கோட்டை, மாலங்குடி ஆகிய இடங்களில் பொது விநியோகத்திட்ட குறை தீர் கூட்டம் வரும் சனிக்கிழமை (ஏப்.21) காலை 10 மணியளவில் நடைபெறும்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேஸ்வரத்தில் 238 மதுபாட்டில்கள் பறிமுதல்; 5 பேர் கைது!!

No comments :
ராமேஸ்வரத்தில் கள்ளத்தனமாக விற்க கொண்டு வந்த 238 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைதாயினர்.

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாம்பனில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு தடை உள்ளது. ஆனால் பலர் பாம்பனில் இருந்து மதுபாட்டில்களை கள்ளத்தனமாக மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு ராமேஸ்வரம் பகுதியில் விற்று வருகின்றனர்.

குடியிருப்பு பகுதிகள், ராமநாதசுவாமி கோயில், ரயில்வே ஸ்டேஷன், கடற்கரை, துறைமுகம், பேருந்து நிலையம் என அனைத்து பகுதியிலும் குடிசைத்தொழில் போல் வீடுகள், கடைகளுக்குள் வைத்து மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது.


செல்போனில் தொடர்பு கொண்டால் உடன் இருக்கும் இடத்திற்கு தேடி வந்து, மதுபாட்டில்களை சப்ளை செய்யும் மொபைல் விற்பனையிலும்பலர் ஈடுபட்டு வருகின்றனர். பாட்டிலுக்கு ரூ.25 முதல் ரூ.100 வரை கூடுதல் விலை வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரம் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாம்பனில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி கடத்தி வந்த 3 பேரை பிடித்தனர். இதுபோல் ராமேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயில் சாலை பகுதியில் மது விற்பனை செய்த இருவரை பிடித்தனர்.

பிடிபட்ட களஞ்சியம்(36), நம்புவேல்(35), அலெக்ஸ்(25), பாலமுருகன் மற்றும் செல்லமுத்து ஆகியோரை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்த 238 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

திறந்தவெளி ’பார்” ஆகிப்போன ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட்!!

No comments :
ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் இரவில் திறந்தவெளி பாராக மாறுவதால் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்ட் முறையான பராமரிப்பு இல்லாமலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளது. புதிய பஸ்ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வந்த பின் இதன் பயன்பாடு 90 சதவீதம் குறைந்துவிட்டது.

இதனால் பழைய பஸ்ஸ்டாண்ட் ரயில் நிலையத்திற்கு எதிரில் இருப்பதால், ரயில்களில் வரும் கிராமப்புற பயணிகள் இங்கிருந்து புறப்படும் டவுன் பஸ்களில் ஊர்களுக்கு சிரமம் இன்றி செல்ல முடிந்தது.

தற்போது, மிகக்குறைவான பஸ்களே பகலில் மட்டும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.


அரண்மனை மணிக்கூண்டு அருகே இருந்தே 90 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுவதால், பழைய பஸ்ஸ்டாண்ட் பயனற்ற நிலையில்தான் உள்ளது. இருந்தாலும், அனைத்து பஸ்களும் பழைய பஸ்ஸ்டாண்டிற்குள் வந்து செல்கின்றன.

திறந்த வெளி பார்:
இரவு 8:30 மணிக்கு மேல் பழைய பஸ்ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வருவதில்லை. பயணிகளும் செல்வதில்லை. இதனை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனால் குடிமகன்கள் கூட்டமாக அமர்ந்து திறந்தவெளி பாராகவே மாற்றிவிட்டனர்.

காலி பாட்டில்களை துாக்கி வீசுகின்றனர். அவை உடைந்து பலரின் பாதங்களை பதம் பார்க்கிறது.

ஆம்னி பஸ்ஸ்டாண்ட்:
மேலும் பழைய பஸ்ஸ்டாண்ட் வளாகத்தை, இரவில் முழுமையாக ஆம்னி பஸ்ஸ்டாண்ட் ஆக மாற்றி விடுகின்றனர்.

பத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இரவில் இங்கே நிறுத்தப்படுகின்றன. தற்போது பகலிலும் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆம்னி பஸ்கள் இங்கிருந்தே புறப்படுகின்றன.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, April 17, 2018

கீழக்கரையில் கஞ்சா விற்பனை; நடவடிக்கை கோரி எஸ்பி யிடம் மனு!!

No comments :
கீழக்கரையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி கீழக்கரையை சேர்ந்த பொதுநல அமைப்புகள் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய கல்விசங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம், எஸ்பி ஓம்பிரகாஷ் மீனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


மனுவில், கீழக்கரை பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. புதுகிழக்கு தெரு, முகம்மது காசீம் அப்பா தர்கா பகுதி, சிவகாமிபுரம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் பகல் நேரங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து இந்த விற்பனை நடந்து வரும் நிலையில் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் பயன் இல்லை. எஸ்பி நேரிடையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


செய்தி: தினகரன்
படம்: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கலெக்டர் அலுவலக வளாகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி!!

No comments :
பரமக்குடி அருகே உள்ளது பெருமாள் கோவில் கிராமம். இந்த ஊரைச்சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மனைவி பாண்டியம்மாள்(வயது 70). இவர் நேற்று காலை தனது மகள் முருகேஸ்வரியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி மூதாட்டி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட தீயணைப்புத்துறை ஊழியர் உடனடியாக அவரின் உடலில் தண்ணீர் ஊற்றினார்.

அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாதுகாப்பாக அவரை மீட்டு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து பாண்டியம்மாள் கூறியதாவது:-


எனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் வீட்டை காலி செய்யாமல் வீட்டினை அபகரிக்க முயன்று வருகிறார்.

வீட்டை காலி செய்யும்படி கூறினால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். 5 பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். ஒரே ஒரு மகன் உள்ளான். உடல் ஊனமுற்ற நிலையில் உள்ளதால் எங்களிடம் உள்ள வீட்டை அபகரிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

இதுகுறித்து கலெக்டர், போலீசார் உள்ளிட்டோருக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரிக்க வரும் அதிகாரிகளையும் அரிவாளால் வெட்ட வருகிறார். இதனால் எனக்கு நியாயம் கிடைக்க வழி இல்லாமல் போய்விட்டது.

எனது சொத்தினை காப்பாற்ற வழியில்லாததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய் தேன். இவ்வாறு கூறினார்.

இதனை தொடர்ந்து போலீசார் அழைத்து சென்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, April 15, 2018

ராமநாதபுரம் நகரில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள்!!

No comments :

ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் காயாம்பு என்பவரின் மகன் வாசுதேவன்(வயது 48). நல்லிருக்கை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ½ பவுன் தங்க நகையை திருடிச்சென்றுவிட்டனர். பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகைகள் அதிர்ஷ்டவசமாக தப்பின. இதுபற்றி தகவல் அறிந்த வாசுதேவன் ஸ்ரீரங்கத்தில் இருந்து திரும்பி வந்து ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதேபோல ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் நடராஜன் என்பவரின் மகன் குமார்(50). இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவில் மர்ம நபர்கள் இவரின் கடையை உடைத்து உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ.7,000த்தை திருடிச்சென்றுவிட்டனர்.

இதேபகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் முனியாண்டி மகன் நாகராஜன்(50). இவரின் கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2,000 பணத்தினை திருடிச்சென்றுவிட்டனர். அடுத்தடுத்த கடைகளில் நள்ளிரவில் புகுந்த நபர்கள் பணத்தினை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர்கள் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, April 11, 2018

சிறந்த சமுதாய நல்லிணக்க கிராமமாக வேளானூர் தேர்வு; ரூ.10 லட்சம் பரிசு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த சமுதாய நல்லிணக்க கிராமமாக தேர்வு செய்யப்பட்ட வேளானூர் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் காசோலை பரிசுத்தொகையை கலெக்டர்முனைவர் நடராஜன் வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் சிறந்த சமுதாய நல்லிணக்க கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேளானூர் கிராமத்திற்கு வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டிற்கு பரிசுத்தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். 


ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.   

அதன்பிறகு, 2017-2018-ஆம் ஆண்டில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழும் சிறந்த சமுதாய நல்லிணக்க கிராமமாக திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேளானூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டது.  அதனடிப்படையில் வேளானூர் கிராமத்தில் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக பரிசுத்தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி தனி அலுவலரிடம் வழங்கினார். 

இதன் மூலம் அக்கிராமத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், சாலைவசதி மேம்பாடு செய்தல், பள்ளிக்கூட கட்டிடம் சீர் செய்தல் போன்ற பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளலாம்.  

அதனைத் தொடர்ந்து, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்காக கமுதி வட்டம், செங்கப்படை கிராமத்தைச் சார்ந்த இராமகிருஷ்ணன் என்பவருக்கு தமிழ்நாடு நோயாளர் நிவாரண நிதியிலிருந்து ரூ.25ஆயிரம் காசோலையினையும், கிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து இறந்த ராமேஸ்வரத்தைச் சார்ந்த லட்சுமணன் என்பவரது குடும்பத்தாருக்கு நிவாரண நிதி உதவியாக தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.15ஆயிரத்திற்கான  காசோலையினையும் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார்.

மேலும் மின்னாளுமை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இ-சேவை மையம் மூலமாக வருவாய்த்துறையின் சார்பாக வழங்கப்படும் பல்வேறு  அடிப்படை சான்றிதழ்களான விவசாய வருமான திட்ட சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ்  உள்ளிட்ட 15 வகையான அடிப்படை சான்றிதழ்கள் பெறும் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு  அடிப்படை சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹென்;சி லீமா அமாலினி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் என்.சுஜிபிரமிளா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து, மாவட்ட மின்னாளுமை மேலாளர் கா.பிரியதர்ஷன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, April 9, 2018

ராமநாதபுரத்தில் ஏப்.11-ம் தேதி கல்விக்கடன் வழங்கும் முகாம் - கலெக்டர்!!

No comments :
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏப்.11-ம் தேதி கல்விக்கடன் வழங்கும் முகாம் ராமநாதபுரத்தில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


ராமநாதபுரம் புனித அந்திரேயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஏப்.11-ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் வங்கியாளர்கள் கலந்து கொள்ளும் கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி, உயர்கல்வி பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கடன் சார்பான ஆலோசனைகளை வங்கியாளர்கள் வழங்கவுள்ளனர்.

மாணவர்கள், பெற்றோர் கல்விக்கடன் குறித்த ஆலோசனைகளப் பெற்று பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற ம.ஜ.க வைச்சேர்ந்த 13 பேர் கைது!!

No comments :
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ரயில் மறியல் செய்ய முயன்றதாக மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த 13 பேரை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயினுலாவுதீன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 13 பேர் ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பாக மதுரையிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயிலை மறிக்க முயற்சி மேற்கொண்டனர்.தகவலறிந்து ராமநாதபுரம் டி.எஸ்.பி.எஸ்.நடராஜ் தலைமையிலான போலீஸார் அவர்களை ரயில் நிலையம் முன்பாகவே வழிமறித்து 13 பேரையும் கைது செய்தனர்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டே ஊர்வலமாக வந்த போது போலீஸார் கைது செய்தனர்.

செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் இலவச வைபை' வசதியுடன் "ஸ்மார்ட்' வகுப்புகள் - அமைச்சர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, 20 கோடி ரூபாய் செலவில் இலவச வைபை' வசதியுடன் "ஸ்மார்ட்' வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிகணினிக்களை வழங்கும் விழா ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.


விழாவில் கலந்து கொண்டு மடிகணினிக்களை வழங்கி அமைச்சர் மு.மணிகண்டன் பேசியது:

தமிழகத்தில் கடந்த 2011 முதல் 2017 ஆம் ஆண்டு வரை 38.40 லட்சம் மாணவ, மாணவியர்க்கு அரசின் சார்பில் விலையில்லா மடிகணினிக்கள் வழங்கப்பட்டுள்ளது, தமிழக அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் தங்களைத் தயார் செய்து கொள்ள ஏதுவாக தொடுவானம் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஒரு பயிற்சி நிலையம் என்ற அடிப்படையில் 11 பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி நிலையங்களில் நீட் தேர்வுக்காக பதிவு செய்யப்பட்ட 271 பேருக்கும் விலையில்லா மடிக்கணினிக்கள் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பத்துறையின் மூலம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் பெறப்பட்டு, குறைந்த கட்டணத்தில் தரமான முறையில் தொலைக்காட்சி சேனல்களை அரசு கேபிள் நிறுவனம் செட்டாப்பாக்ஸ் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை , கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் முதல் கட்டமாக அம்மா வைபை மண்டலம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, மண்டபம்,ராமநாதபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 39 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் ரூ.20 கோடி மதிப்பில் முதற்கட்டமாக வைபை மற்றும் கணினி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி "ஸ்மார்ட் கிளாஸ்" வகுப்புகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.முருகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஜெகஜோதி, பள்ளித் தலைமை ஆசிரியை ஜெ.விசுவாசம் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, April 8, 2018

வெயில் காலங்களில் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் - கலெக்டர்!!

No comments :
வெயில் காலங்களில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2018-ஆம் ஆண்டின் கோடைகாலம் வழக்கமான வெப்பநிலையை விட கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  பொதுமக்களுக்கு வெயில் தொடர்பான அபாயங்கள் குறித்து உடன் அணுகிட இராமநாதபுரம் மாவட்ட பேரிடர் அவரச செயலாக்க பிரிவில் இலவச தொலைபேசி எண்: 1077 எந்த நேரத்திலும் செயல்பட்டு வருகிறது. அதனை பயன்படுத்திட பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 


மேலும் பொதுமக்கள் கோடைக்காலத்தில் தாகம் இல்லாவிடினும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும்.  லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத, தளர்வான முழுக்கை ஆடைகள் அணிதல் வேண்டும். வீட்டின் ஜன்னல், கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருப்பின் பகல்; நேரங்களில் அவற்றை முடிய நிலையலும், இரவு நேரங்களில் அவற்றை விலக்கி வைத்து வீட்டினை குளுமையாக இருக்கும் வகையில் பராமரித்துக் கொள்ள வேண்டும். மின்விசிறி பயன்படுத்தியும் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை  குறைத்திட செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது . 

வெளியில் செல்லும்போது தவறாது குடை அல்லது தொப்பி, காலணி அணிந்து செல்ல வேண்டும். இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, மோர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வீட்டில் செய்யப்பட்ட லஸ்ஸி, சாத நீர், எலுமிச்சை சாறு, மோர், ஓ.ஆர்.எஸ் எனப்படும் உப்பு சர்க்கரைக்கரைசல், உப்பு கலந்த கஞ்சி, பழரசங்கள் போன்றவற்றை பருகவும். வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் தவறாது குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டிவைத்து, அவற்றிற்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் தீவணம் அளிக்க வேண்டும்.

இதுதவிர நண்பகல் 12.00 மணி முதல் 3.00 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மது, தேனீர், காப்பி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.அதிக புரதம், மாமிச கொழுப்புச் சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கடும்வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளை கடைப்பிடித்து கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)