முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 18, 2020

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருதுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக, மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந. லெனின் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

 

தமிழகத்தில் வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. வீர, தீர செயல்புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப் பதக்கத்தை பெற தகுதி படைத்தவராவர். பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் இந்த பதக்கத்தைப் பெற வயது வரம்பு கிடையாது.



2021-ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள இப் பதக்கத்துக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீர செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் வழங்கப்பட வேண்டும்.

 

எனவே, வீர, தீர செயல்கள் புரிந்த தகுதியுள்ளவர்கள் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் விவரங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நவம்பர் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, November 16, 2020

ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டர் பொறுப்பேற்றுக்கொண்டார்; பிரியாவிடை பெற்ற திரு.வீரராகவராவ் !!

No comments :

ராமநாதபுரம் கலெக்டராக பணியாற்றி வந்த வீரராகவராவ் வேலைவாய்ப்புத்துறை இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வீரராகவராவிடம் இருந்து தனது பணி பொறுப்புகளை பெற்றுக்கொண்டார்.

 

புதிய கலெக்டராக பணிஏற்ற பின்னர் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

 

ராமநாதபுரம் மாவட்டத்தின் 23-வது கலெக்டராக பணி ஏற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசு ஏராளமான மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய முன்னுரிமை அளித்து செயல்படுவேன். இங்கிருந்து செல்லும்போது இதில் மனநிறைவு பெற்றுதான் செல்வேன். கொரோனா நோய் பரவல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

கொரோனா பரவல் 2-வது அலை வந்துவிடாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரத்தில் தொழில்வளர்ச்சி கிடைத்தால் முன்னேற்றமடையும். பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதற்குரிய சாத்தியக்கூறுகள் ஆராய்வது தொடர்பாக எனது உழைப்பு நிச்சயம் இருக்கும். கல்வி மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தி முக்கியத்துவம் பெறும் வகையில் செயல்படுவேன்.

 


தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறந்ததும் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற திட்டம் வைத்துள்ளேன். அதனை செயல்படுத்தி மாவட்டத்தில் அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பேன். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் ஆய்வு மேற்கொண்டு குறைபாடுகளை நீக்கி அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

கடந்த 2003-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட துணை கலெக்டராக பணியை தொடங்கி 2004-2006 வரை உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி பாப்பாபட்டி கீரிப்பட்டி தேர்தலை நடத்தியவர். 2007-ல் மதுரை மேற்கு இடைத்தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாகவும், 2009-11 ஆண்டு வரை மதுரை மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், 2011-12-ம் ஆண்டு வரை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும், 2012-13-ல் தஞ்சாவூர் சுகர் மில்ஸ் மூத்த செயல் அலுவலராகவும், 2013-15-ம் ஆண்டு வரை அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு பிரிவில் வருவாய் அதிகாரியாகவும் பணியாற்றி இருக்கிறார். 2015-17 முதல்-அமைச்சர் அலுவலக துணை செயலாளராகவும், 2017-ல் ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு பெற்று மறுவாழ்வு துறை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

 

இதன்பின்னர் தற்போது ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய கலெக்டரின் பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம் என்பதும் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி மாவட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


புதிய கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அவர்களுக்கு நம் முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, November 15, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ.16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

No comments :

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ.16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

 

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 2021 ஜன.1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

 


இதனடிப்படையில் முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், நவ.16 இல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி விற்பனை கடும் பாதிப்பு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் தீபாவளி விற்பனை பாதிக்குப்பாதியாக ரூ.2 கோடி வரை குறைந்து விட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி, வீட்டுஉபயோக பொருட்கள், பட்டாசு, ஸ்வீட்கடைகளில் வியாபாரம் ரூ.4கோடி வரை நடைபெறும். ஆனால் இவ்வாண்டு கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது.

 


 

இதனால் எதிர்பார்த்த அளவிற்கு தீபாவளி விற்பனை இல்லை. பட்டாசு, ஜவுளி வியாபாரத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான சரக்கு தேக்கமடைந்துள்ளன. கடன் வாங்கி முதலீடு செய்த வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

செய்தி; தினசரிகள்



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, November 1, 2020

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் 30-ந் தேதி முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா நடைபெறும். இதில் கலந்து கொள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மதுரை வந்து தங்கினார்.

 

நேற்று காலையில் காரில் மதுரையில் இருந்து புறப்பட்டு 9.20 மணிக்கு பசும்பொன் வந்தார். அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், பாஸ்கரன், ஓ.எஸ்.மணியன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர் உடன் வந்தனர்.

 

பின்னர் அனைவரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

 


இதை தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்தி விழாவும், 58-வது குருபூஜை விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் 1908-ம் ஆண்டு பிறந்தார். அவர் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்தார். இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து இளைஞர்களை திரட்டி, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாக செம்மல் ஆவார்.

 

1920-ம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடைமுறையில் இருந்த குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக தேவர் மேற்கொண்ட போராட்டம் அப்போது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது.

 

1937-ம் ஆண்டு மாநில தேர்தலில் ராமநாதபுரத்தில் இருந்து தேவர் போட்டியிட்டார். ஆங்கில அரசால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பலம் வாய்ந்த ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிர்த்து மகத்தான வெற்றி பெற்றவர். அதை தொடர்ந்து 1946-ம் ஆண்டு சென்னை மாகாணம் தேர்தலிலும் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1948-ம் பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார். 1937 முதல் 1962-வரை நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு அத்தனை தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றவர்.

 

தேசியத்தையும், ஆன்மிகத்தையும் அடிப்படையாக கொண்டு அவர் ஆற்றிய சொற்பொழிவு அவருக்கு தெய்வதிருமகனார் என்ற பெயரை பெற்று தந்தது. தேவர் பிறந்ததும், மறைந்ததும் அக்டோபர் 30-ந் தேதி என்பது குறிப்பிட்டத்தக்கது. அவர் வாழ்ந்த நாட்கள் 20 ஆயிரத்து 75 நாட்கள், சிறையில் இருந்தது 4 ஆயிரம் நாட்கள். தேவர் பிறந்தநாளான அக்டோபர் 30-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 1979-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்றைய தினத்தில் இருந்து ஆண்டு தோறும் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு அரசு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

 

1994-ம் ஆண்டு சென்னை நந்தனத்தில் தேவருக்கு முழுதிருவுருவ வெண்கல சிலையை ஜெயலலிதா அமைத்து திறந்து வைத்தார். மேலும் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தை சீரமைத்து தற்போது நினைவகம் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. அ.தி.மு.க. சார்பில் தேவரின் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும் என்று 2010-ம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 2014-ம் ஆண்டு ஜெயலலிதா பசும்பொன் கிராமத்திற்கு நேரில் வந்து 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

தேவருக்கு அரசு விழா மற்றும் சென்னையில் முழு உருவ வெண்கல சிலை, பசும்பொன்னில் தேவருக்கு தங்க கவசம் என அவருக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் பணிகளை அ.தி.மு.க. தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

 

மேலும் அ.தி.மு.க. அரசால் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கு, பால்குடம், முளைப்பாரி மண்டபம், முடி காணிக்கை செலுத்தும் கட்டிடம், குடிநீர்வசதி, பேவர்பிளாக் சாலை வசதி, பொதுக்கழிப்பிட வசதி என பல்வேறு பணிகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தேவருக்கு அனைத்து சிறப்புகளையும் செய்தது அ.தி.மு.க. அரசுதான் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

 

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.