முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, January 29, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 1,480 ஆசிரியர்கள் கைது!!

No comments :
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு மறியல் செய்து கைதாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் திரளாக சேர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் திரளாக கலந்துகொண்டனர். 


ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அனைவரும் சாலைமறியல் செய்ய முயன்றதால் போலீசார் வழிமறித்து 886 பெண்கள் உள்பட 1,480 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி, உச்சிப்புளி, தேவிபட்டிணம், திருப்புல்லாணி, சத்திரக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள 17 திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

அரசு சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 36 துறைகளை சேர்ந்த 5 ஆயிரத்து 615 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதால் இந்த பணிக்காக ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் நேற்றும் திரளாக வந்து மனு கொடுத்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் கூறியதாவது:-

மாவட்டத்தில் பள்ளிகள் மூடப்படாமல் திறந்து செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 200 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர்கள் யாரும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிபணியிடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக இதுவரை 4 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ள நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட சரிபார்ப்பில் 1,254 பேர் தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசின் வழிகாட்டுதலின்படி தற்காலிக பணி நியமன உத்தரவு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, January 27, 2019

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தினவிழா!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார். அதனை தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். முன்னதாக விழாவிற்கு வந்த மாவட்ட கலெக்டரை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

விழாவில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி 10 ஆண்டுகள் நிறைவு செய்த 62 போலீசாருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பதக்கங்களையும், 41 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 90 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.


அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 105 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 54 ஆயிரத்து 848 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளையும் கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார். சிறப்பாக நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் உள்ள மாவட்ட சவகர் சிறுவர் மன்றம், தமிழ்நாடு யோகாசன சங்கம் ஆகியவற்றை சார்ந்த 544 மாணவ, மாணவிகள், சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் 127 அரசு அலுவலர்களின் சேவைகளை பாராட்டி குடியரசு தினவிழாவில் கலெக்டர் வீரராகவராவ் பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, January 26, 2019

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்த போராட்டம்!!

No comments :
தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதியம் மதிப்பூதியம் போன்றவற்றை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் போன்ற 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 9 தாலுகா தலை நகரங்களிலும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் யூனியன் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பரமக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் பவுல் தலைமையிலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சாமிஅய்யா, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலையிலும் மறியல் நடைபெற்றது. ராமேசுவரத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் புதுராஜா தலைமையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் ஜெயசீலன், அரசு ஊழியர் பொறுப்பாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

கீழக்கரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ராமு தலைமையிலும், தமிழாசிரியர் சங்க அமைப்பாளர் குமாரவேல், அரசு ஊழியர் பொறுப்பாளர் மணிமொழி ஆகியோர் முன்னிலையிலும் மறியல் நடைபெற்றது.

திருவாடானையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சண்முக துரை தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.மங்கலத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க வட்டார தலைவர் ஆரோக்கியம் தலைமையில் மறியல் நடைபெற்றது.

முதுகுளத்தூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் அருள்தாஸ் தலைமையிலும், கடலாடியில் மாவட்ட துணை செயலாளர் இமானுவேல் ஜேம்ஸ் தலைமையிலும், கமுதியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் ஆயிரத்து 387 பெண்கள் உள்பட 2 ஆயிரத்து 222 பேர் கலந்து கொண்டு கைதானதாக போலீசார் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட வில்லை. அலுவலக பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் முழுமையாக செயல்படாமல் பூட்டப்பட்டிருந்தன.

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவ- மாணவிகளை கொண்டு பள்ளிகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அனைத்து பள்ளிகளும் பூட்டியே கிடந்தன. இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கல்வி பாதிக்கப்பட்டது. தனியார் பள்ளிகள் மட்டுமே இயங்கின.

அரசு தரப்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 15 ஆயிரத்து 748 பேரில் 4 ஆயிரத்து 285 பேர் மட்டும் எவ்வித விடுமுறை அறிவிப்புமின்றி வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று தெரிவிக்கப்பட்ட தகவலில் 2-ம் நாள் போராட்டத்தில் 387 பேர் விடுமுறையில் உள்ளதாகவும், 5 ஆயிரத்து 911 பேர் எவ்வித விடுமுறை அறிவிப்புமின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் நாளை விட 2-ம் நாளில் அதிகம் பேர் கலந்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, January 22, 2019

ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான சாலை பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலான சாலை பணிகளை அமைச்சர் டாக்டர்மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் மொத்தம் 15.48 கி.மீ நீள அளவிலான பல்வேறு சாலைப்பணிகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு பகுதிகளிலுள்ள பழுதடைந்த சாலைகளை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்காக 5 சிப்பங்களாக மொத்தம் ரூ.10 கோடி மதிப்பில் 15.48 கி.மீ நீள அளவிலான சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


இச்சாலை மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்திடும் விதமாக பூமி பூஜை விழா நடைபெற்றுள்ளது. அதேபோல, ராமநாதபுரம் நகரத்தின் பிரதான சாலையான அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையிலான சாலையினை ரூ.34 கோடி மதிப்பில் மேம்படுத்திட ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் பணிகள் துவங்கப்படும்.

மேலும், ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட சிதம்பரம்பிள்ளை ஊரணியில் பொதுமக்கள் நலனுக்காக, எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  ரூ.54 லட்சம் மதிப்பில் ஊரணியின் வடக்கு கரையில் சுற்றுச்சுவர், பேவர்பிளாக் பதிக்கப்பட்ட நடைபாதை, நுழைவுவாயிலில் அலங்கார வளைவு போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.  இவை அனைத்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார். 

அதனைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், ஆர்.எஸ்.மடை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்புல்லாணி, மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைப் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் அ.வீரமுத்துக்குமார், நகராட்சி உதவி பொறியாளர் எம்.சுப்பிரமணிய பாபு உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, January 17, 2019

ராமநாதபுரத்தில் ஜனவரி 21 ஆம் தேதி முதல் இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி!!

No comments :
ராமநாதபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ஜனவரி 21 ஆம் தேதி முதல் இலவச கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி தொடங்குகிறது.

இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்படுகிறது.

மையம் சார்பில் ஜனவரி 21 ஆம் தேதி முதல் ஆடவர்களுக்கான குளிர்சாதன பழுது நீக்கல் உள்ளிட்டவையும், மகளிருக்கான அப்பளம், ஊறுகாய், மசாலா உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்படவுள்ளன. பயிற்சியில் சேர விரும்புவோருக்கு கட்டணம் ஏதுமில்லை. இலவசமாகவே பயிற்சி அளிக்கப்படவுள்ளது.


பயிற்சியின் போது காலை, மாலை உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்கான அனைத்துப் பொருள்களும் மையம் சார்பில் வழங்கப்படும். பயிற்சியில் கிராம், ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

பயிற்சியில் சேர வயது வரம்பு 19 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பத்து நாள்கள் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி குறித்து மேலும் விவரங்களை அறிய 04567-221512 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


பயிற்சி மைய அலுவலகத்துக்கு நேரில் வந்து பெயர்களைப் பதிவு செய்பவர்களுக்கு பயிற்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, January 14, 2019

அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின்கீழ் மானியத்தில் ஸ்கூட்டர் பெற்றிட ஜனவரி 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 2017–18–ம் ஆண்டில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின்கீழ் 1,920 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர்.

இதேபோல தற்போது 2018–19–ம் ஆண்டிற்கும், 1,920 பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் பணிபுரியும் 8–ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களது தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தங்களது குடும்பத்திற்கு பொருள் ஈட்டுவதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து பணிபுரியும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தொழிற்பிரிவுகளில் பணியாளர்களாக தங்களை பதிவு செய்துள்ள பெண்கள், கடைகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், சுய தொழில், சிறு வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்கள், சமூக நிறுவனங்களான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மாவட்ட கற்றல் மையம் ஆகியவற்றில் தொகுப்பு ஊதியம், தினக்கூலி, ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணிபுரியும் பெண்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆஷா பணியாளர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.
விண்ணப்பிக்கும் பயனாளிகளில் தொலைதூரத்தில் உள்ள குக்கிராமங்கள், மலைப்பாங்கான பகுதிகள், பெண்களை குடும்ப தலைவராக கொண்ட குடும்பங்களை சார்ந்த மகளிர், ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனுடைய மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் இனத்தை சேர்ந்த பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு அவர்கள் புதிதாக வாங்கும் ஸ்கூட்டரின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். வாகனம் 1.1.2018–க்கு பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.வாங்கப்படும் வாகனம் புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டதாகவும், மோட்டார் வாகன சட்டம் 1988–ன்கீழ் வட்டார போக்குவரத்து அலுவலரால் பதிவு செய்யப்படும் வகையிலும் இருக்க வேண்டும்.

வயது, முகவரி, ஓட்டுனர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளுடன் விண்ணப்பிக்கும் பயனாளிகளை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையாளர், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மாவட்ட அளவிலான பரிசீலனைக்குழு ஆய்வு செய்து தகுதியுள்ள பயனாளிகளுக்கு மானியம் விடுவிக்கப்படும்.

எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்ப படிவங்களை பெற்று வருகிற 18–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, January 12, 2019

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் சுகாதார சீர்கேடு!!

No comments :
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் முறையாக குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் முறையாக அள்ளுவது கிடையாது. குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு அருகில் குடியிருப்பு வீடுகள், தபால் நிலையம், வங்கிகள், கடைகள் என பல உள்ளதால் அப்பகுதியில் சுற்றுப்புற சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.தொட்டிகளில் சேரும் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பை தொட்டிகளுக்கு அருகிலேயே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி வழியாக செல்லும் நபர்கள் மூக்கை பிடித்தபடி தினமும் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

டிராபிக் ஜாம் ஏற்படும்போது டூவிலர் செல்வோர் பலமுறை குப்பைகளின் மேல் ஏறி வழுக்கி விழந்துள்ளனர்.

இப்பிரச்னை தடுக்க நகராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியில் சேரும் குப்பைகளை தினந்தோறும் அள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, January 10, 2019

ராமநாதபுரம் குடிநீரில் தொட்டியில் மிதந்த பிணம், போலீஸ் விசாரனை!!

No comments :

ராமநாதபுரம் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் சுதாகர்(வயது 55). இவர் அதே தெருவில் புத்தகக்கடை நடத்தி வந்தார். சமீபத்தில் அவருடைய தாயார் இறந்து விட்டார். இதனால் சரிவர கடைக்கு செல்லாமல், சோகத்துடன் காணப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென அவர் மாயமானார். பின்னர் 2 நாட்கள் கழித்து வீடு திரும்பிய அவர் மீண்டும் மாயமானார். அதன் பின்னர் அவர் என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. அவருடைய குடும்பத்தினர் சுதாகரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டியை பார்வையிட, நகராட்சி பணியாளர்கள் சென்றிருந்தனர். அந்த தொட்டி 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். அந்த தொட்டி முழுவதும் குடிநீர் ஏற்றப்பட்டு இருந்தது.

குடிநீர் தொட்டிக்குள் பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அழுகிய நிலையில் ஒருவரது உடல் தொட்டியில் மிதந்து கொண்டிருந்தது. இதுதொடர்பாக பஜார் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் அந்த தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகத்தை நிறுத்தினர்.


போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன், சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். குடிநீர் தொட்டியில் இருந்து உடல் மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. விசாரணையில் அவர் மாயமான சுதாகர் என்பதும், தாயார் இறந்த துக்கத்தில் அவர் குடிநீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த குடிநீர் தொட்டியில் இருந்துதான், ராமநாதபுரம் நகரின் பெரும்பாலான பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த தொட்டியில் அழுகிய நிலையில் பிணம் மீட்கப்பட்டதையடுத்து, ராமநாதபுரம் நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தாங்கள் பிடித்து வைத்திருந்த குடிநீரை அப்புறப்படுத்தினர்.

ராமநாதபுரம் நகரசபை ஆணையாளர் வீரமுத்துகுமார், பொறியாளர் குமரகுரு, சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் பணியாளர்களுடன் சென்று மேல்நிலை தொட்டியில் இருந்த 10 லட்சம் லிட்டர் குடிநீரையும் கழிவுநீர் கால்வாயில் திறந்து விட்டு வெளியேற்றினர். பின்னர் பணியாளர்கள் தொட்டிக்குள் இறங்கி மருந்துகளை தெளித்து சுத்தம் செய்தனர்.

கடும் குடிநீர் பஞ்சம் நிலவக்கூடிய இந்த நேரத்தில் நகராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டியை பாதுகாப்பின்றி ஊழியர்கள் திறந்து வைத்திருந்ததும், அதில் ஒருவர் விழுந்து தற்கொலை செய்துகொண்டது கூட தெரியாமல் 4 நாட்கள் கழித்து, அழுகிய நிலையில் பிணம் மிதந்த பின்பே கண்டுபிடிக்கப்பட்டதும் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 3 நாட்களாக அந்த தொட்டியில் இருந்து வினியோகித்த தண்ணீரை குடித்த மக்கள் பீதியில் உள்ளனர். எனவே இனியாவது குடிநீர் தொட்டிகளை பாதுகாப்பான முறையில் மூடிவைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, January 8, 2019

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் குறித்து புகார் தெரிவிக்க அதிகாரிகள் செல்லிடப் பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடர்பாக புகார் ஏதும் இருப்பின் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் மற்றும் வட்ட அளவில் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களின் செல்லிடப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 04567-230506, 9445476344,

பரமக்குடி வட்டத்துக்கு சார்ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரன் 9445000473,

ராமநாதபுரம் வட்டத்துக்கு, வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன் 9445000472,

திருவாடானை வட்டத்துக்கு தனித்துணை ஆட்சியர் திருஞானம் 9445461747,

கமுதி வட்டத்துக்கு உதவி ஆணையர் ச.ரவிச்சந்திரன் 9445074591,

முதுகுளத்தூர் வட்டத்துக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் என். சுகிபிரேமலா 7338801269,

கடலாடி வட்டத்துக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மு. மதியழகன் 9445000362 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

கீழக்கரை வட்டத்துக்கு கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) எம்.அமிர்தலிங்கம் 9486448501,

ராமேசுவரம் வட்டத்துக்கு தனித்துணை ஆட்சியர் (மறுவாழ்வு) ந.ராமச்சந்திரன்( மண்டபம் அகதிகள் முகாம்) 8300163431,

ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இரா.சிவதாஸ் 9443647321


ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, January 7, 2019

ராமநாதபுர மாவட்டத்தில் 3,60,212 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு!!

No comments :
ராமநாதபுரத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய வருவாய் வட்டங்களுக்குள்பட்ட நியாய விலைக் கடைகளில் கூட்டுறவுத் துறையின் சார்பாக சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000, விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் நிகழச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் கலந்து கொண்டு 3,60,212 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 மற்றும் 2,34,358 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் பணிகளைத் தொடக்கி வைத்து பேசியது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் மொத்தம் 3,50,212 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல வருவாய்த்துறையின் மூலம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2,94358 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் பணிகளும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.இவை எந்தெந்த தேதியில் எந்தெந்த கிராம குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படவுள்ளது என்பது குறித்த விபரங்களை மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் தேதி வாரியாக அட்டவணை தயார் செய்து, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மக்கள் பார்வைக்கு வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை தமிழர்கள் 518 பேருக்கு முதல் முறையாக இந்த பொங்கல் பரிசுப்பொருள்களுடன் ரூ 1000 வழங்கப்படுகிறது என்றார்.
இவ்விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.மு.முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.மதியழகன்,ராம்கோ கூட்டுறவுத் தலைவர் | கே.முருகேசன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பரமக்குடி பாரதிநகரில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். பிசிஎம்எஸ் சங்க தலைவர் எம்.கே.ஜமால், முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ், பொதுக்குழு உறுப்பினர் எம்.நாகராஜன், நகர செயலாளர் எஸ்.வி.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இதில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.மணிகண்டன்,

பரமக்குடி வட்டத்தில் உள்ள  69,340 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.


விழாவில் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வடிவேல்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ.பாதுஷா, ஒன்றிய செயலாளர்கள் கே.முத்தையா, ப.குப்புச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கூட்டுறவு பதிவுத்துறை இணை இயக்குநர் முருகேசன் வரவேற்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, January 3, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 4 , 11 , 18 மற்றும் 25 ஆம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் இம்மாதத்தில் 4 நாள்கள் நடத்தப்படவுள்ளதாக ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை இந்த முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் இம்மாதத்தில் வரும் 4 , 11 , 18 மற்றும் 25 ஆம் தேதிகளில் என வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளன.

இதில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தகுதியுடைய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும், தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், மார்பளவு புகைப்படம் ஐந்து , அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றுடன் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும்.

இவ்வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் முகாமில் பங்கேற்பவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் பதிவில் குறைபாடுகள் இருந்தால், அது உடனடியாக சரி செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, January 2, 2019

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை; மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியம்!!

No comments :
பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழகத்தில் முழுமையாக நேற்று முதல் அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றுப்பொருட்கள் உற்பத்திக்கு அரசு திட்டமிடாததால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இருந்தாலும் மாற்றம் மக்களிடம் ஏற்பட்டால் மட்டுமே முழுமையாக ஒழிப்பது சாத்தியம். அதற்கு அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்.

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும், மண்ணை மலடாக்கும், நீர் பிடிப்பு பாதிப்பு, புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக பிளாஸ்டிக் உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்கள் பரவ காரணமாகியது. இதனால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பாக்கெட்டுகள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் உணவுப்பொருட்கள் பேக்கிங், மேஜை விரிப்புகள், பிளாஸ்டிக் பூச்சு உள்ள பொருட்கள் அனைத்தும் ஆறு மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்டது.

மண்குவளைகள், பாக்குமட்டை தட்டுகள், துணிப்பைகள், சணலால் ஆன பைகள், ஓலைகளால் உருவாக்கப்படும் பெட்டிகள். மரங்களில் தயாரிக்கப்படும் சமையல் துடுப்பு, தயிர் மத்து, கரண்டிகள், கைப்பைகள், துணியால் ஆன மேஜை விரிப்புகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தப்படுகின்றன. 

மக்களிடம் நீக்கமற நிறைந்த பிளாஸ்டிக் பொருட்களை ஒரே நாளில் நிறுத்திவிட முடியாது என்பதால் தான், அரசு 6 மாதங்களுக்கு முன்பாக தடை அறிவித்தது. மாற்றுப்பொருட்கள் உற்பத்தியோ போதுமான அளவில் இல்லை. மக்கள் மாற்றுப்பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மக்கள் கேரி பேக்குக்கு பதிலாக துணிப்பபைக்கு மாறி வருகின்றனர். கடைகளில் துணிப்பைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அதிகாரிகள் தரப்பில் துணிப்பையிலும் கலர் பைகள் விற்பனை செய்யக்கூடாது. கலர் சேர்க்கும் போது, அதில் உள்ள வேதிப்பொருட்களால் பாதிப்பு ஏற்படும் என்று அதற்கும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். 

பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் ஒரு சில வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இருந்து வருகிறது. குறிப்பாக கேரி பேக்குகள், டம்ளர்கள், பூக்கடைகள், இறைச்சி கடைகள் முழுமையாக மாற்றம் பெறவில்லை என்பதே உண்மை. 

பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது குறித்தும், மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துதல் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மகளிர் திட்டம் சார்பில் மாற்றுப்பொருட்கள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மாற்றுப்பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 


அரசு எத்தனை தடை விதித்தாலும், அதனை பயன்படுத்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தின் மூலம் தான் முழுமையான தடையை அமல்படுத்த முடியும். மக்கள் பயன்பாடு குறைந்து மாற்றுப்பொருட்களுக்கு மாற வேண்டும். மாற்றத்தில் இருந்து தான் ஏற்றம் காண முடியும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)