முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 20, 2016

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 20247 பேர் பயன்!!

No comments :
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 20247 பேர் மருத்துவச் சிகிச்சை மற்றும் பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்திருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாத மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.  

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.28,22,87,649 செலவில் 20,247 பேர் மருத்துவ வசதி பெற்றுள்ளனர்.

குறிப்பாக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.10.82 கோடி செலவில் 6924 பேருக்கும்,  பரமக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.7.04 கோடி செலவில் 4030 பேருக்கும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் ரூ.2.32 கோடி செலவில் 2013 பேருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை பெற்றிட ஏதுவாக ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென தனிப்பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த அரிய வசதியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் வரும் அக்-23ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதும் போட்டி!!

No comments :
இந்திய அஞ்சல் துறையின் சார்பில் வரும் 23 ஆம் தேதி ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிரதமருக்கு கடிதம் எழுதும் போட்டி நடைபெற இருப்பதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் என்.ஜே. உதயசிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

பள்ளி மாணவர்கள் தங்கள் கனவுகள் மற்றும் விருப்பங்களை பாரதப் பிரதமருடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக மாணவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படவுள்ளது. ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் நேஷனல் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இம்மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை போட்டி நடைபெறும்.


இந்தியாவின் பன்முகத்தன்மையே வலிமை என்ற தலைப்பில் பாரதப்பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும். 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம். கடிதம் எழுதத் தேவையான உள்நாட்டுக் கடிதம், தபால்தலை ஆகியன இலவசமாக வழங்கப்படும். 

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் கடிதங்கள் எழுதலாம்.
முதல் மூன்று பேர் பரிசுக்கு தேர்வு செய்யப்படுவர். கோட்ட அளவில் தேர்வு செய்யப்படும் 5 கடிதங்கள் மதுரை மண்டல அளவில் தேர்வு செய்யப்படும். 

போட்டியில் பங்கேற்க விரும்புவோர்கள் தங்களது அடையாள அட்டையுடன் நேரில் வந்து கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் அக். 27இல் சமையல் எரிவாயு நுகர்வோர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் அக். 27இல் சமையல் எரிவாயு நுகர்வோர் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  

மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் அக். 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர் தலைமையில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. 

எனவே எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

சிறந்த இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் நேருயுவகேந்திரா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்களுக்கு நேருயுவகேந்திரா சார்பில் விருது வழங்கப்பட உள்ளது.

இது குறித்து நேருயுவகேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் கே.ஜவஹர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் ஆண்டு தோறும் மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டிற்கு சிறப்பாக செயல்பட்ட இளைஞர் மற்றும் மகளிர் மன்றத்திற்கு விருது வழங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறோம்.  


விண்ணப்பிக்கும் மன்றங்கள் நேரு யுவகேந்திராவிலும் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்து இருக்க வேண்டும். கடந்த 1.4.2015 முதல் 31.3.2016 வரை சிறப்பாக பணியாற்றி இருப்பதற்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும். 

பரிசுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். இதில் தேர்வு செய்யப்படும் மன்றம், மாநில அளவிலான இளையோர் மன்ற விருது தேர்வுக்கு அனுப்பப்படும். 

விருது பெறத் தகுதியுள்ள மன்றங்கள் விண்ணப்ப படிவங்களை மாவட்ட நேருயுவ கேந்திரா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.    

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 
மாவட்ட நேருயுவகேந்திரா
பாரதிநகர்
ராமநாதபுரம்-623503 

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும் என அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)